
நாமக்கல்
சாராயக் கடையை மூடக்கோரி இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க உள்ளதாகவும் அதன்பிறகும் சாராயக் கடையை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மக்கள் எச்சரித்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் தண்ணீர்பந்தல் மேடு பகுதியில் இரண்டு சாராயக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த இரண்டு கடைகளையும் மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்தில் அந்த இரண்டு கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி பகல் 12 மணியளவில் டாஸ்மாக் சாராயக் கடை ஊழியர்கள் கடையைத் திறந்ததையறிந்த மக்கள் கடையை மூட வேண்டும் என்று, சாராயக்கடை பாரை அடித்து நொறுக்கி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் பாரை சேதப்படுத்தியதாக மூன்று பேரை பரமத்தி வேலூர் காவலாளர்கள் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதனையறிந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் திடீர் என பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் திரண்டனர். பின்னர் பார் உரிமையாளர் மற்றும் பாரை சேதப்படுத்தியதாக கூறப்படும் நபர்களிடையே சமரச பேச்சுவார்த்தை ஏற்பட்டதையடுத்து மக்கள் கலைந்தனர்.
இந்த நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் கடைகளை ஊழியர்கள் வழக்கம்போல் திறந்தனர். இதையடுத்து கடைகளை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் கடைகளை பூட்டுமாறு முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பரமத்தி வேலூர் காவல் ஆய்வாளர் லட்சுமணகுமார் மற்றும் காவலாளர்கள் அங்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் காவலாளர்களின் அறிவுறுத்தலின்பேரில் கடைகளை பூட்டிவிட்டு ஊழியர்கள் அங்கிருந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியது:
“இந்தப் பகுதியில் உள்ள சாராயக் கடைகளை மூடக்கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பினோம். காவலாளர்களிடமும் பலமுறை சாராயக் கடைகளை மூடவேண்டும் என்று எடுத்துக் கூறினோம். போராட்டங்களிலும் ஈடுபட்டோம். ஆனால் அந்த சமயத்தில் மட்டும் கடைகளை மூடிவிட்டு பின்னர் திறந்து விடுகிறார்கள்.
எனவே இந்த கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி நாளை (இன்று) மாவட்ட ஆட்சியரை சந்தித்து மீண்டும் மனு கொடுக்க உள்ளோம். அதன்பிறகும் இதன்பேரில் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று எச்சரித்தனர்.