
மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர்கள் பயப்படுவதாக கூறுவது தவறி என்றும், அப்படி பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
தமிழக அரசை மத்திய பாஜக அரசு இயக்கி வருவதாக பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசு அமைப்புகள் மூலம் அதிமுக அரசை ,பாஜக அரசு மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசின் பல திட்டங்களை தமிழக அரசை மிரட்டித்தான் பாஜக செயல்படுத்தி வருவதாகவும் தெரிகிறது. ஜெயலலிதா மிகக்கடுமையாக எதிர்த்த உதய் மின் திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம், ஜிஎஸ்டி போன்ற திட்டங்களை தற்போதைய தமிழக அரசு எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மதுரையில் அரசு சார்பில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளதாகவும், ஜெயலலிதா இருந்திருந்தால் நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி இருப்பார் என்றும் கூறினார்.
பாஸ்போர்ட்டில் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஒருவர் விரும்பி மாற்று மொழியை கற்று கொள்ளலாம், ஆனால். கட்டாயமாக திணிக்கக்கூடாது என தெரிவித்தார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டால் இந்த மண்ணின் மைந்தன் என்ற முறையில் பெருமை அடைவேன் என்று அவர் தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர்கள் பயந்து கொண்டே இருப்பதாக கூறுப்படுவது தவறு என்றும் பயப்பட வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.