
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்குச் சொந்தமான எரிவாயு கிணற்றின் அருகே தீப்பிடித்து பரவியது. செயல்படாத கிணறு என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள அஞ்சாறுவார்த்தலை கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்குச் சொந்தமான ஆழ்துளை எரிவாயு கிணறு உள்ளது.
இந்தக் கிணறு தற்போது செயல்பாட்டில் இல்லை. கிணற்றைச் சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆழ்துளை எரிவாயு கிணறு அருகே அடர்ந்து வளர்ந்திருந்த கோரைப்புற்களில் நேற்று திடீரென தீப்பற்றியது. இந்தத் தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் குத்தாலம் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடி தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்புப் படை வீரர்கள் நிகழ்விடத்துக்கு விரைந்துச் சென்று தீயை அணைத்தனர்.
“அஞ்சாறுவார்த்தலையில் உள்ள எரிவாயு கிணறு (எண் 33) தற்போது செயல்படாத நிலையில் உள்ளதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஒ.என்.ஜி.சி அதிகாரிகள் கூறுகின்றனர்.
எரிவாயு கிணற்றின் அருகே பிடித்த தீ பரவுவதற்குள் தீயணைப்புப் படையினர் அணைத்து விட்டனர். ஒருவேளை தீ பரவி கிணறு வரை சென்றிருந்தால் இந்த ஊரின் நிலைமை என்னவாயிருக்கும்? என்ற பயமே இருக்கிறது என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து குத்தாலம் காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எரிவாயு கிணறு அருகே தீ விபத்து நடந்ததால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர். ஒரே ஆறுதல் அந்த கிணறு செயல்படவில்லை எனபது மட்டுமே.