
நாமக்கல்
தமிழக அரசின் திட்டங்களால் மாணவ, மாணவிகளின் கல்வித்தரமும், தேர்ச்சி சதவீதமும் உயர்ந்து கொண்டே செல்கிறது என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் ஆலாம்பாளையம் பேரூராட்சி, பள்ளிபாளையம் அக்ரகாரம் ஊராட்சி, எலந்தகுட்டை, கலியனூர் அமானி, தட்டாங்குட்டை ஆகிய ஊராட்சிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களில் வகுப்பறை தொடக்கவிழா, புதிய சாலை மேம்பாட்டுப்பணி தொடக்க விழா மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி நிறைவு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் செல்வக்குமார சின்னையன் முன்னிலை வகித்தார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று, புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களின் வகுப்பறைகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் புதிய சாலை மேம்பாட்டுப்பணியை தொடங்கி வைத்து, அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
”தமிழக அரசின் திட்டங்களால் மாணவ, மாணவிகளின் கல்வித்தரமும், தேர்ச்சி சதவீதமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. மாணவ, மாணவிகளின் நலனுக்காக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும், நீங்கள் முழுமையாக பெற்று பயன்படுத்திக் கொண்டு அதற்கு நன்றிக் கடனாக நீங்கள் ஒவ்வொருவரும் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் பெறுவதோடு, 100 சதவீத தேர்ச்சியினையும் பெற்று தாங்கள் படிக்கும் பள்ளிக்கும், பயிற்றுவித்த ஆசிரியருக்கும், உங்களது பெற்றோர்களுக்கும் பெருமையை தேடித்தர வேண்டும்” என்று அமைச்சர் தங்கமணி பேசினார்.
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் ஆலாம்பாளையம் பேரூராட்சி, காவேரி ஆர்.எஸ். அரசு உயர்நிலைப்பள்ளியிலும், களியனூர் அமானி அரசு உயர்நிலைப்பள்ளி, எலந்தகுட்டை ஊராட்சிக்குட்பட்ட இ.புதுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, தட்டாங்குட்டை ஊராட்சி அருவங் காடு அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தலா ரூ.1 கோடியே 85 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.7 கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நான்கு பள்ளிகளிலும் புதிய வகுப்பறைகளை மாணவர்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் தங்கமணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதைத் தொடர்ந்து எலந்தகுட்டை ஊராட்சி வெள்ளிக்குட்டையில் சாலை மேம்பாட்டு பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
பின்னர் ஆலாம்பாளையம் பேரூராட்சி காவேரி ஆர்.எஸ். ஓடப்பள்ளி பிரிவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 1 முதல் 5 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ்களை 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அமைச்சர் வழங்கினார்.
இதில் குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன், பள்ளிபாளையம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் செந்தில், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் கந்தசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சுப்பிரமணியம், பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராம கிருஷ்ணராஜ், பள்ளிபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர் வெள்ளியங்கிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.