
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி 13 மக்கள் தங்கள் உயிரை பலியாக கொடுத்த பிறகு, இப்போது தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்கும் படி உத்தரவிட்டிருக்கிறது. இது இந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது. ஆனாலும் இந்த வெற்றிக்காக 13 உயிர்களை பலிகொடுத்திருப்பது மக்கள் மனதில் என்றும் ஆறாத வடுவாக நிற்கும்.
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அப்பாவி மக்கள் சுட்டு கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அதில் நடிகர் ஜி.வி.பிரகாஷும் ஒருவர். இவர் பல சமுதாய பிரச்சனைகளின் போது மக்களோடு மக்களாக கலந்து கொண்டு போராடவும் செய்திருக்கிறார்.
தற்போது தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பிறப்பித்திருக்கும் ஆணையை வரவேற்று, டிவிட்டர் ஒரு பதிவு செய்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் அதில்” உயிரைக் குடுத்து உரிமை காத்த போராளிகளின் உதிரம் பேசும் எம் மக்கள் வீர வரலாறு...அரசாணை தற்காலிக வெற்றி .. நிரந்தரவு தீர்வு நீதிமன்றத்தில் கிடைக்கும் வரை எதுவும் மாறாது , மாறவும் கூடாது..!!”என அவர் தெரிவித்திருக்கிறார்.
ஏனென்றால் இதற்கு முன்பும் ஒரு முறை மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மார்ச் 2013ல் இந்த ஆலையை மூட உத்தரவிட்டிருந்தார். அதன் பிறகு ஸ்டெர்லைட் நிறுவனம் ஆகஸ்ட் 2013ல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகி ஆலையை நடத்தும் உரிமை பெற்றது. எனவே தான் நிரந்தரவு தீர்வு நீதிமன்றத்தில் கிடைக்கும் வரை எதுவும் மாறாது , மாறவும் கூடாது என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.