
விருதுநகர்
இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி நடந்த ஊர்வலத்தில் மல்லாங்கிணறு மேட்டுப்பட்டி கிராமத்தினர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் ராஜரானிடம் மனு கொடுக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதி திராவிட சமுதாயத்தினர் நேற்று காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அதில், “மேட்டுப்பட்டி கிராமத்தில் ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்த 500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கூலி மற்றும் விவசாய வேலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள நாங்கள் எங்கள் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைத்ததன் பேரில் அவர்களும் பல்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர்.
வருடந்தோறும் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை காவலாளரின் அனுமதி பெற்று நடத்துவதோடு காவலாளரின் அனுமதியுடன் வாகனங்களில் அவரது நினைவு இடத்திற்கு சென்று வருவோம். கடந்த 11–ஆம் தேதியும் காவலாளரின் அறிவுறுத்தலின் படியே நினைவு தினத்தை நடத்தினோம்.
இந்த நிலையில் கடந்த 11–ஆம் தேதி எங்கள் கிராமத்தில் இருந்து ஐந்து வாகனங்களில் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் அனுமதிப் பெற்று பரமக்குடி சென்றிருந்தோம். கடந்த 15–ஆம் தேதி எங்கள் கிராமத்தினர் மீது மக்களுக்கு இடையூறு செய்ததாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் இது பற்றி மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்குச் சென்று கேட்டபோது மேலிடத்தில் உங்கள் மீது வழக்கு போட சொல்லியிருக்கிறார்கள் என தெரிவித்தனர். இதனால் நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.
சட்டத்திற்கு உட்பட்டும், அமைதியான முறையிலும் காவலாளரின் அனுமதியுடனும் இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை நடத்தியதோடு காவலாளரின் அனுமதியோடு பரமக்குடி சென்று வந்த எங்கள் மீதும் எந்த தவறும் செய்யாத எங்கள் கிராமத்து இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் எங்களது எதிர்காலம் மிகவும் பாதிப்படையும்.
எனவே, இந்த வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.