
விழுப்புரம்
செஞ்சியில் ஒரே கிராமத்தில் 50–க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டதில் தாத்தாவும், பேரனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேவுள்ள நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் விஜயகுமார் (26). இவர் கடந்த சனிக்கிழமை முதல் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அவர் சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதனையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருடைய உடல் நிலை மேலும் மோசமானதால், மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே விஜயகுமாரின் தாத்தா சேவநாயகம் (75), பாட்டி விசாலாட்சி (68), தாய் தமிழரசி, அண்ணன் சிவக்குமார் (30) ஆகியோரும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் செஞ்சி அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினர். இந்த நிலையில் சேவநாயகம் நேற்று காலை உயிரிழந்தார்.
இதற்கிடையே இக்கிராமத்தில் உள்ள மேட்டுத்தெரு, ஓடைத்தெரு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (35), இன்பரசி (6), கமலா (40), சூர்யா (18), ராஜகுமாரி (30), செல்லியம்மாள் (42), சீனு (25), சுபாஷ் (23), தமிழ்ச்செல்வன் (8), வனஜா (37), சுகந்தி (13), பச்சயம்மாள் (58), தீபக்ராஜ் (6), ஏகாம்பரம் (30), காசி (60) உள்பட 50–க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, செஞ்சி, விழுப்புரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே கிராமத்தில் 50–க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், மற்ற தெருக்களில் வசித்து வரும் மக்களுக்கு இதனால் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, சுகாதாரத் துறையினர் நல்லாத்தூர் கிராமத்துக்கு விரைந்து வந்து போர்க்கால அடிப்படையில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மர்ம காய்ச்சலுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.