
வேலூர்
வாணியம்பாடியில் கூடுதலாக சாராயக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் கடையை முற்றுகையிட்டும், சாலை மறியல் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியிலிருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் சாலையில் தும்பேரி என்ற கிராமம் உள்ளது. இங்கு ஏற்கனவே ஒரு டாஸ்மாக் சாராயக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவால் நெடுஞ்சாலைகளில் மூடப்பட்டக் கடைகள் வேறு இடங்களில் திறக்கப்பட்டு வருகின்றன.
தும்பேரியிலும் ஏற்கனவே செயல்பட்டு வந்த கடையின் அருகில் வாடகைக் கட்டிடத்தில் மேலும் ஒரு டாஸ்மாக் சாராயக் கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக நேற்று முன்தினம் இரவே சாராய புட்டிகள் இந்தக் கடைக்குக் கொண்டு வரப்பட்டன.
நேற்று மதியம் கடையை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்ததை அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் புதிய கடையை திறக்கவிடாமல் அதனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு வந்த காவலாளர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தும்பேரி கூட்ரோடு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் நடந்த இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரம், தாலுகா காவல் ஆய்வாளர் சுரேஷ், நகர காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் காவலாளர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை ஏற்ற மக்கள், சாலை மறியலை கைவிட்டனர். ஆனால், மீண்டும் அந்த டாஸ்மாக் சாராயக் கடை முன்பு அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட செய்தனர்.