
வேலூர்
காட்பாடியில் இருந்து வேலூர் செல்லும் மார்க்கத்தில் செல்போன் பேசிக்கொண்டு பேருந்தை ஓட்டிய ஓட்டுநருக்கு ஆறு மாதங்கள் பேருந்து ஓட்ட தடை விதித்தும், அசல் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்தும் போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருந்து வேலூர் நகரின் முக்கிய சாலை வழியாக தினமும் அரசு, தனியார் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
அதில் பெரும்பாலானவை பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், அரசு அலுவலர்கள் பயணம் செய்யும் பேருந்துகள்.
அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் விரைவாக செல்வதால் மக்களிடம் தனியார் பேருந்துகளுக்குதான் மௌசு அதிகம்.
இந்த நிலையில் காட்பாடி - வேலூர் மார்க்கத்தில் இயக்கப்பட்ட ஒரு தனியார் பேருந்து ஓட்டுநர், ஒரு கையில் செல்போனை வைத்துக் கொண்டு பேசிய படியும், மற்றொரு கையால் பேருந்தை ஓட்டியும் சென்றுள்ளார்.
இதனைப் பார்த்த பயணி ஒருவர் தனது செல்போனில் இந்தக் காட்சியை பதிவு செய்து ‘வாட்ஸ் ஆப்’-பில் பரவ விட்டார்.
இந்த வீடியோ காட்சி பதிவை வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுரேஷ் பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து நேற்று அவரும், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கட்ராகவனும் காட்பாடி சாலையில் வந்துக் கொண்டிருந்த தனியார் பேருந்துகளில் ஏறி சோதனைச் செய்தனர்.
மேலும், செல்போன் பேசிய படி ஓட்டுநர் ஓட்டி வந்த பேருந்தில் ஏறி, அந்த ஓட்டுநரின் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டார்.
அதில் பேருந்து ஓட்டுநர் வேலூரைச் சேர்ந்த சரவணன் (24) என்பதும், அவர் பேருந்தை ஓட்டிய நேரத்தில் செல்போன் பேசியதும் உறுதிச் செய்யப்பட்டது.
இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் சரவணன், ஆறு மாதங்கள் பேருந்து ஓட்ட அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும் அவருடைய அசல் வாகன ஓட்டுனர் உரிமத்தை அதிகாரிகள் பறிமுதலும் செய்தனர்.