
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் 410 துணை சுகாதார நிலையங்களில் 410 துணை சுகாதார நிலையங்களில் 33 ஆயிரத்து 931 குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் துணை சுகாதார நிலையத்தில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தலைமை தாங்கினார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் ஆர்.மீரா, கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காட்டாம்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி வரவேற்றார். தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் பங்கேற்று ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் பணியைத் தொடக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியது:
“வயிற்றுப்போக்கு நோயால் பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், மாவட்டத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 931 குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள 410 துணை சுகாதார நிலையங்களில் பிறந்து 6, 10, 14 வாரங்கள் பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும்.
மாவட்டத்தின் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தச் சொட்டு மருந்து வழங்கப்படும்” என்று பேசினார்.
இந்த விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, வட்டார வளர்ச்சி அலுவலர் வெ.புருஷோத்குமார், தனி அலுவலர் கருணாகரன் உள்பட அரசு அலுவலர்கள், மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.