
கடலாடியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்களை காரில் வந்த முகமூடி கும்பல் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலாடி இந்திரா நகரை சேர்ந்தவர்கள் வேல்முருகன் (23) முனுசாமி ( 25). இவர்கள் இருவரும் முதுகுளத்தூர் - சாயல்குடி சாலை அருகில் இருக்கும் இந்திரா நகருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை கண்காணித்து பின்னால் காரில் வந்த 6 பேர் கொண்ட முகமூடி கும்பல், வேல்முருகன் மற்றும் முனுசாமியை சரமாரியாக தாக்கி குண்டு கட்டாக தூக்கி சென்றது.
இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கடலாடி - கோவிலாங்குளம் சாலையில் காரில் சென்ற அக் கும்பல், கார் மற்றும் டிரைவரை விட்டு விட்டு அவர்களை வேறு ஒரு காரில் ஏற்றி கொண்டு தப்பித்து சென்றது.
எஸ்.பி தனி பிரிவு ஏட்டு மாடசாமி கடத்திய காரை மடக்கி பிடித்து, கடலாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.