
பெரம்பலூர்
இந்த நிதியாண்டில் 57 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.64 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "பெரம்பலூர் மாவட்டத்தில் 2017 - 18-ஆம் நிதியாண்டில் வருவாய்த் துறை மூலம் 57 ஆயிரத்து 303 பயனாளிகளுக்கு ரூ.64 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, உழவர் பாதுகாப்பு உதவித்தொகை 5 ஆயிரத்து 421 பேருக்கும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை 3 ஆயிரத்து 122 பேருக்கும், கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை ஆயிரத்து 39 பேருக்கும் ஆதரவற்ற விதவை உதவித்தொகை 7 ஆயிரத்து 254 பேருக்கும்,
இந்திரா காந்தி மாற்றுத்திறனாளி உதவித்தொகை 474 பேருக்கும், முதியோர் உதவித்தொகை 19 ஆயிரத்து 32 பேருக்கும், விதவை உதவித்தொகை 8 ஆயிரத்து 180 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழர் விதவை உதவித்தொகை 13 பேருக்கும், இலங்கை தமிழர் முதியோர் உதவித்தொகை 20 பேருக்கும் இலங்கை தமிழர் மாற்றுத்திறனாளி உதவித்தொகை 2 பேருக்கும் முதிர்கன்னி உதவித்தொகை 203 பேருக்கும் என பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 57 ஆயிரத்து 303 பயனாளிகளுக்கு ரூ. 64 கோடியே 39 இலட்சத்து 73 ஆயிரத்து 510 மதிப்பிலான நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன" என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.