
நீலகிரி
அரியவகை பழ நாற்றுகளின் உற்பத்தியை அதிகரித்து அழிந்து வரும் இந்தப் பழவகைகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ராஜகோபால் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் வருடந்தோறும் மே மாதத்தில் பழக் கண்காட்சி நடத்தப்படும். நீலகிரியின் தட்ப வெப்பநிலையில் விளையும் மருத்துவ குணமிக்க பழவகைகளைக் காப்பாற்றும் நோக்கத்தில்தான் இந்தப் பழக் கண்காட்சி நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்ஸ் பூங்காவில் 1958-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு பழக் கண்காட்சியில் மருத்துவ குணமிக்க முள்சீத்தா, மங்குஸ்தான், துரியன் பழங்கள், தவிட்டுப் பழம், ஊசிகலா, டமிட்டா, தாட்பூட் உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் சொற்ப அளவிலேயே காட்சிப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து பழக் கண்காட்சியில் பங்கேற்ற வியாபாரிகள், தோட்ட உரிமையாளர்கள், "அழிந்து வரும் நிலையில் உள்ள மருத்துவ குணமிக்க பழங்களை விளைவிக்கும் விவசாயத்தைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இனி வரும் காலங்களில் மருத்துவ குணமிக்க பழங்களை கண்காட்சியில் காண்பதுகூட அரிதாகிவிடும்' என்று ஆதங்கப்பட்டனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ராஜ கோபால், "அண்மைக் காலமாக குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் தொல்லையால் அறியவகை பழங்களைச் சாகுபடி செய்வது குறைந்துவிட்டது.
எனவே, வீட்டுத் தோட்டங்களை அமைக்கவும், பழத்தோட்ட விவசாயிகளுக்கு அறிவகை பழ நாற்றுகளை உற்பத்தி செய்து மிகக் குறைந்த விலையில் வழங்கவும், 60 எக்டேர் பரப்பளவில் கமலா ஆரஞ்சு வளர்க்க விவசாயிகளுக்கு உதவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இரத்த அழுத்தம், கொழுப்பு, வயிற்று வலி உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் பேஷன் புரூட், மங்குஸ்தான் போன்ற பழங்களை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்க ஊக்குவித்து வருகிறோம்.
விக்கிப்பழம், ஊசிகலா, தவிட்டுப் பழம் உள்ளிட்டவற்றை வனப் பகுதிகளில் வளர்க்க வனத்துறை ஆலோசித்து வருகிறது.
வருங்காலத்தில் தோட்டக் கலை துறை சார்பில் அரியவகை பழ நாற்றுகளின் உற்பத்தியை அதிகரித்து அழிந்து வரும் இந்தப் பழவகைகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.