
போக்குவரத்துத் தொழிலாளர் கேட்பதைக் கொடுக்க மனம் இருக்கிறது ஆனால் அரசிடம் நிதி இல்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.
தமிழக அரசு நிதி பற்றாக்குறையால் திணறி வருவதாக கோடிட்டுக் காட்டியுள்ளார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் போனஸ் ஆகியவை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது தோல்வியில் முடிந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, போக்குவரத்துப் பணியாளர்கள் தொழிற்சங்கங்கள் கால்வரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கின. இதனால், போக்குவரத்து பெரிதும் முடங்கியது. பயணிகளை பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றனர் சில பணியாளர்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பெரும் சிரமத்தை மக்கள் சந்தித்து வரும் நிலையில், இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோபி செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அப்போது அவர் கூறுகையில், “தமிழக அரசு நிதிப் பற்றாக்குறையால் திணறி வருகிறது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தைத் தர அரசுக்கு மனம் உள்ளது; ஆனால் நிதிதான் இல்லை” என்று கூறினார்.