
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தனது பைக்கின் பின்புறம் பேரிகார்டரை இழுத்துச் சென்ற பீட்டர் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
புத்தாண்டு அன்று இரவு போதையில் வாகனம் ஓட்டுவது, பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது என ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாகி வருகிறது. 2017 ஆம் ஆண்டு போலீஸார் எவ்வளவோ கெடுபிடிகள் செய்தும் 8 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.
விபத்தில்லா புத்தாண்டாக இந்த ஆண்டை அனுசரிக்க உத்தேசித்த போக்குவரத்து போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு 9 மணி முதல் புத்தாண்டு அதிகாலை 3 மணி வரை சென்னை முழுவதும் கடுமையான போக்குவரத்து நடைமுறைகளை கொண்டு வந்தனர். இதற்கு முந்தைய ஆண்டுகளில் நிகழ்ந்த விபத்துகள் போல் இந்த ஆண்டும் நடக்கக் கூடாது என்பதற்காக கடும் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனாலும் ஒரு சில இடங்களில் இளைஞர்கள் செய்த அட்டகாசம் போலீசாரையும், பொது மக்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உற்சாக மிகுதியில் பீட்டர் என்ற இளைஞர், பேரிகார்டரை தனது பைக்கின் பின்புறம் இழுத்துச்சென்றார்.
இதைத் தொடர்ந்து அவர் தான் செய்த செயலை சாகசமாக நினைத்து தனது முகநூலில் பதிவிட்டார். மேலும் போலீஸ் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று பெருமையடித்திருந்தார். இந்த வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில் முகநூலில் பீட்டர் வெளியிட்ட வீடியோவை ஆதாரமாக கொண்டு தனிப்படை போலீசார் நேற்று இரவு அவரை கைது செய்தனர்.