
போக்குவரத்து ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 19,500 வழங்க வேண்டும், ஓய்வூதியம், பணிக்கொடை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், வருங்கால வைப்புத்தொகையை உரிய கணக்கில் சேர்க்க வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த 7000 கோடி நிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
13வது ஊதிய ஒப்பந்தத்தில் 2.57 மடங்கு ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2.44 மடங்கு என்ற ஊதிய உயர்வு வழங்குவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்றைய முன் தினம் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நீதிமன்றத்தின் தடை மற்றும் எச்சரிக்கையை மீறி 4வது நாளாக இன்றும் வேலைநிறுத்தம் நடைபெற்றுவருகிறது. இதனால் பொதுமக்களும் பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று கோவையிலிருந்து கோபிக்கு வந்த அரசு பேருந்தின் ஓட்டுநர் எஸ்.எஸ்.சிவக்குமார் ஹெல்மெட் அணிந்திருந்தார். போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்துவரும் நிலையில், அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுநரான சிவக்குமார் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நடந்துவரும் நிலையில், தான் பணி செய்வதால், தன்னை யாரும் தாக்கிவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக ஹெல்மெட் அணிந்தபடி பேருந்து ஓட்டியதாக சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
தொமுச, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் மட்டும் பணிக்கு செல்வதால், சில இடங்களில் பேருந்தின் மீதும் பணியில் உள்ள ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், பணிக்கு சென்ற ஓட்டுநர் ஒருவருக்கு சேலை கட்டிக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய சம்பவம் ஒன்று நடந்தது.
அதனால் இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையாக சிவக்குமார் ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கியுள்ளார்.