
டெலிகாம் சந்தையில் ஜியோவின் புரட்சி அனைத்து தரப்பினரையும் அன்னார்ந்து பார்க்க வைத்துள்ளது. 2ஜி பயன்பாட்டாளர்களும் கூட 4ஜி பயன்பாட்டுக்கு மாறினார்கள். ஜியோ-வும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. குறைந்த ரூபாயில் பயன்பாட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகளைப் பெற்று வருகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப ஜியோ நிறுவனம் பல்வேறு இடங்களில் டவர்களை அமைத்து வருகின்றன.
ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, கோவில்பாளையம், புதுக்காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் கையில் புகார் மனுவோடும், கலவர முகத்தோடும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, எங்கள் கிராம பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
எங்கள் குடியிருப்புகளுக்கு நடுவே, ஜியோ நிறுவனம் 5ஜி, 6ஜி-க்கான டவர்களை அமைத்து வருகிறது. இந்த டவர்களால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுத்தும். எனவே, டவரை எப்படியாவது அங்கிருந்து அகற்றி விடுங்கள் என்று கூறினர்.
மேலும பேசிய அவர்கள், எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஜியோ டவரால் சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படும அபாயம் உள்ளது. இந்த டவர் செயல்படுவதன் மூலம், மக்களுக்கு மூளை பாதிப்பு, வலிப்புநோய், புற்றுநோய் போன்றவை ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த டவரில் இருந்து வெளியேறும் அலைக்கற்றையால், மனித உயிர்களுக்கு மட்டுமின்றி, இயற்கை வாழ் பறவையினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால், எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டவரைப் பார்த்து மக்கள் அச்சத்துடன் உள்ளனர் என்றனர். எங்கள் பகுதி மக்கள் பட்டியலின மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். இந்த டவரின் பிரம்மாண்டத்தைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள். எங்கள் பகுதியில் உள்ள ஓலை வீடுகள், ஓட்டு வீடுகள்தான் அதிகம் உள்ளன. இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் டவர் சாய்ந்து என்னாவது என்ற பீதியில் மக்கள் உள்ளனர்.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டவரை ஏன் எங்கள் பகுதியில் அமைக்கிறார்கள். நாங்களும் மனிதர்கள் தானே. மக்களை அச்சுறுத்தும், பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த டவரை எங்கள் பகுதியில் இருந்து அப்புறப்படுத்துங்கள் என்று அவர்கள் கூறினர்