
வாட்ஸ்-ஆப்பில் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனுப்பிய வேண்டுகோளுக்கு மதிப்பளித்து ஈரோடு மாநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் பி.மல்லிகா பரமசிவம், ஒபிஎஸ்-க்கு ஆதரவு அளித்தார்.
“அதிமுக கட்சி தொண்டர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொதுமக்கள் சார்பில் ஓபிஎஸ்க்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று வாட்ஸ்-ஆப்பில் தொடர்ந்து வேண்டுகோள் அனுப்புகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து முன்னாள் எம்.பி. என்.ஆர்.கோவிந்தராஜர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.என்.கிட்டுசாமி, பி.ஜி.நாராயணன், பொன்னுசாமி, கே.எஸ்.பழனிச்சாமி ஆகியோர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போது, ஈரோடு மாநகர் மாவட்ட மகளிரணி செயலாளரும், ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயருமான பி.மல்லிகா பரமசிவம் சென்னைக்குச் சென்று ஓபிஎஸ்-க்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பி.மல்லிகா பரமசிவம் தெரிவித்ததாவது:
“எங்கள் கட்சிக்கு பொதுச் செயலாளராகவும், எங்கள் குடும்பத்துக்கு தலைவராகவும் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், கட்சியில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளுக்கும் கட்சியின் தொண்டர்கள் என்ற முறையில் கட்டுப்பட்டு வந்தோம்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த பிறகும், அவர் முதலமைச்சராக தொடர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பொது மக்களும், அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வமே முதலமைச்சராக வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதுடன் அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தற்போதைய எம்.பி.க்கள் என்று பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதைவிட பொதுமக்களின் ஆதரவு அதிகமாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு உள்ளது. நானும் ஈரோடு மாநகரின் பல பகுதிகளிலும் பொதுமக்கள், அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப எனது ஆதரவினை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு தெரிவித்துள்ளேன்.
அவரை நேரில் சந்தித்தபோது மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவருக்கு உறுதுணையாக இருப்பேன். அ.தி.மு.க. கட்சிக்கும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமைக்கும் விசுவாசமாக கட்சிப்பணியைத் தொடர்வேன்” என்று அவர் தெரிவித்தார்.