சல்லிக்கட்டுனா! சல்லிக்கட்டு!! மறவபட்டி சல்லிக்கட்டு – முழக்கம் எழுப்பி அதிரவைத்த ஊர் மக்கள்…

Asianet News Tamil  
Published : Feb 13, 2017, 09:16 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
சல்லிக்கட்டுனா! சல்லிக்கட்டு!! மறவபட்டி சல்லிக்கட்டு – முழக்கம் எழுப்பி அதிரவைத்த ஊர் மக்கள்…

சுருக்கம்

திண்டுக்கல் மாவட்டம் மறவபட்டியில் நடந்த சல்லிக்கட்டில் “சல்லிக்கட்டுனா! சல்லிக்கட்டு!! மறவபட்டி சல்லிக்கட்டு” என்று முழக்கமிட்டவாறு சீறிப்பாய்ந்த முரட்டுக்காளைகளை அடக்க முயன்ற 18 வீரர்கள் உள்பட 30 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவை அடுத்த மறவபட்டியில் புனித அந்தோணியார் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. முன்னதாக நவநாள் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

இந்த திருவிழாவில் புனித பெரிய அந்தோணியார் உள்ளிட்ட புனிதர்களின் திரு உருவங்கள் தாங்கிய மின் இரதங்களின் ஊர்வலம் மற்றும் வான வேடிக்கை போன்றவை நடைபெற்றன.

இதில் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து நேற்று காலை பரிசுப்பொருள் அழைப்பு நடைபெற்றது.

காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. மொத்தம் 274 வீரர்களை வாடிவாசல் பகுதிக்கு செல்ல அனுமதி அளித்தனர்.

பின்னர் 9.30 மணிக்கு சல்லிக்கட்டு தொடங்கியது. திண்டுக்கல் உதவி ஆட்சியர் ஆகாஷ் கொடி அசைத்து சல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார். முதலில் உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அறிவிப்பாளர் அறிவிக்க ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.

அலங்காநல்லூர், பாலமேடு, திருச்சி, விராலிமலை, மணப்பாறை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 155 சல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன.

வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த முரட்டுக்காளைகளை, வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். சில காளைகள் யாருக்கும் பிடிபடாமல் பாய்ந்துச் சென்றன.

சல்லிக்கட்டு காளைகள் மீது வண்ணப்பொடிகள் வீசப்பட்டிருந்ததால், வாடிவாசலில் இருந்து வெளியே வந்தபோது வண்ணப்பொடிகள் புகை மண்டலமாக காட்சி அளித்தது. அவற்றை பிடிக்க வீரர்கள் திண்டாடினர்.

சில காளைகள் தங்களைப் பிடிக்க முயன்ற வீரர்களை கொம்புகளால் தூக்கி வீசி பந்தாடின. இதுபோன்றே சில காளைகள் மைதானத்திற்குள் வந்ததும் நிதானமாக நின்று சுற்றும் முற்றும் பார்த்தபடி கொம்புகளை ஆட்டி மாடுபிடி வீரர்களை மிரட்டின.

இதனைப் பார்த்த பார்வையாளர்கள், நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் சல்லிக்கட்டுனா! சல்லிக்கட்டு!! மறவபட்டி சல்லிக்கட்டு!!! என முழக்கங்கள் எழுப்பினர்.

இதில், காளைகள் முட்டியதில் 18 வீரர்கள் உள்பட 30 பேர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த காப்பிளியபட்டியை சேர்ந்த பகவதிராஜ் மற்றும் மைலாப்பூரை சேர்ந்த அந்தோணி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு வெள்ளிக்காசுகள், இரும்பு பீரோ, சில்வர் அண்டா, பானை, குடம், பித்தளை குத்துவிளக்குகள், பிளாஸ்டிக் சேர், செல்போன், கட்டில்கள் போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.

இந்த விழாவில் தாடிக்கொம்பு சண்முகவேல் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கந்தசாமிக்கவுண்டர், திண்டுக்கல் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெயசீலன், அகரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் அகரம் சக்திவேல், தாடிக்கொம்பு பேரூர் கழக அ.தி.மு.க. செயலாளர் முத்துராஜ், தாடிக்கொம்பு கூட்டுறவு கடன் சங்க தலைவர் முத்தையா, தாடிக்கொம்பு பேரூர் கழக தி.மு.க. செயலாளர் நாகப்பன், அகரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் அம்மாவாசி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சல்லிக்கட்டை கண்டுகளித்தனர்.

மறவபட்டி ஊர் பெரியதனக்காரர்கள், சல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

Kalaignar Magalir Urimai Thogai: ஜூன் மாதம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்கும்? உடனே செக் பண்ணுங்க.!
Tamilnadu Heavy Rain: தமிழகத்தில் இன்று முதல் ருத்தரதாண்டவம் ஆடப்போகும் பெய் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? முக்கிய அப்டேட்!