
திண்டுக்கல்
புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதற்கு மக்கள் விரைவில் குடிநீர் விநியோகிக்காவிட்டால் அடுத்த போராட்டம் பெரியளவில் இருக்கும் என்று எச்சரித்தனர்.
திண்டுக்கல் அருகே அடியனூத்து ஊராட்சியில் உள்ளது பெருமாள்கோவில்பட்டி. இப்பகுதி மக்களுக்கு மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே அந்த மேல்நிலைக் குடிநீர் தொட்டி சேதமடைந்ததால் கடந்த ஒரு மாதமாக மேல்நிலைத் தொட்டியில் குடிநீர் ஏற்றப்படுவதில்லை.
மேலும் அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு மாதமாக குடிநீர் விநியோகமும் செய்யப்படவில்லை. இதனால் அந்த மக்கள் விலைக்கு குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், புதிதாக மேல்நிலைத் தொட்டிக் கட்ட வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் அந்தப் பகுதி மக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று நல்லாம்பட்டி பிரிவு பகுதியில் திரண்டு குடிநீர் கேட்டு திண்டுக்கல் – நத்தம் சாலையில் வெற்றுக் குடங்களை வைத்து மறியல் செய்தனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபக்கங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்தன.
இதுகுறித்து தகவலறிந்ததும் அதிகாரிகள், திண்டுக்கல் தாலுகா காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பெருமாள்கோவில்பட்டியில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கு மக்கள், விரைவில் குடிநீர் விநியோகிக்காவிட்டால் அடுத்த போராட்டம் பெரியளவில் இருக்கும் என்று சொல்லிவிட்டு அம்மக்கள் மறியலை கைவிட்டு கலைந்தனர்.