
இந்த ஆட்சி ஏன் தொடர வேண்டும்?...இப்படி கேட்பது ஸ்டாலினோ, அன்புமணியோ அல்ல சாமான்யன்தான். அந்த அளவுக்கு அடிப்படை வசதிகள் விஷயத்தில் கூட அலட்சியத்தின், இயலாமையின் உச்சத்தில் இருக்கிறது எடப்பாடி அரசு.
ஏன் இந்த சுளீர் விமர்சனம்? காரணம் இருக்கிறது.
தமிழகம் முழுக்கவே பல ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள் இருக்கின்றன. ஒரு காலத்தில் அரிசி, சரக்கரை, கோதுமை, பருப்பு வகைகள், கெரசின், பாமாயில், ரவை, மைதா போன்ற அடிப்படை உணவு பொருட்களை நியாய விலையில் விற்றது போக தேயிலைத்தூள், சோப்பு போன்றவற்றையும் கூட விற்குமளவுக்கு நிர்வாகம் இருந்தது.
ஆனால் பத்து மாதங்களாக, அதிலும் சமீபத்திய ஆறு மாதங்களில் கேடு கெட்டு போயிருக்கிறது நியாயவிலைக்கடைகளின் நிலை. அடிப்படை உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை கூட போதுமான அளவுக்கு கடைகளுக்கு வருவதில்லை. ஆயிரத்து முந்நூறு கார்டுகள் இருக்கும் ரேஷன் கடைக்கு வெறும் இருநூறு கார்டுகள் அளவுக்குதான் சர்க்கரை வருகிறது. பல குடும்பங்கள் ரேஷன் கடையில் சர்க்கரை வாங்கி மூன்று, நான்கு மாதங்களாகிவிட்டன.
ரேஷனில் சர்க்கரையும், கோதுமையும் கிடைப்பதில்லை என்பதால் சில்லறை கடைகள் இந்த பொருட்களின் விலையை ஏற்றிவிட்டன.
ஒரு காலத்தில் ரேஷன் கடை ஊழியர்களை சரிகட்டி அவர்களிடமிருந்து குறைந்த விலையில் சர்க்கரையையும், கோதுமையையும் வாங்கி நல்ல லாபத்தில் விற்றன இந்த தனியார் கடைகள்.
ஆனால் இப்போதோ அங்கே நிலவும் தட்டுப்பாட்டை பயன்படுத்தி கொள்ளை லாபத்தில் கொழிக்கின்றனர். அரசாங்கம் செய்யும் சப்ளை குறைவு என்பது மட்டுமில்லாமல் ரேஷன் கடை ஊழியர்களின் தகிடுதத்தம் வேறு சேர்ந்து கொள்வதால் மக்கள் பாடு படு கேவலமாக இருக்கிறது.
ரேஷனில் மட்டுமா சிக்கல்?! தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் குடி தண்ணீர் குழாயில் நீர் வந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. மழையில்லை, நீராதாரங்கள் வறண்டு கிடக்கின்றன! அப்படியானால் அரசாங்கம் மட்டும் எப்படி நீரை வழங்க முடியும்? என்று கேட்கலாம். அட லாரி தண்ணீரை விடுவதிலாவது ஒரு நியாயத்தை மெயின்டெயின் செய்யலாம். பதவியிலேயே இல்லாத கவுன்சிலர்களின் அடாவடி சட்டப்படிதான் லாரிகள் தண்ணீரை ஊற்றிக் கொண்டிருக்கின்றன.
இந்த விஷயத்தில் பொதுமக்களின் வசதி என்பது பார்க்கப்படுவதேயில்லை. பிழைப்புக்காக மக்கள் வேலைக்கு சென்று விட்ட காலை நேரங்களில்தான் லாரி வருகிறது. மக்கள் வீட்டிலிருக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் வரச்சொன்னால் லாரிகள் வருவதில்லை. காசு கொடுக்கும் ஏரியாவுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா ரெண்டு ட்ரிப் அடிக்கிறார்கள் லாரி மனிதர்கள்.
இல்லாதப்பட்ட ஏழை மக்களின் பகுதியை கண்டு கொள்வதேயில்லை. இந்த விஷயங்களில் அந்தந்த தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என யாருக்கும் எந்த அக்கறையுமில்லை.
அரசாங்க செலவில் தமிழகம் முழுக்க அனைட்த்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. வீடுகளில் கழிப்பிட வசதியில்லாத மக்கள் இவற்றைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தண்ணீர் பிரச்னையால் இந்த சுகாதார வளாகங்களின் தொட்டிகளில் பூனையும், பெருச்சாளியும் தூங்குகிறது.
போர்வெல் போட்டு தண்ணீர் வசதி செய்யலாம். ஆனால் இங்கே போர்வெல் போட்டதாக கணக்கு காட்டிவிட்டு அதிகாரிகளின் வீடுகளிலும், நகர செயலாளர், ஒன்றிய செயலாளர் வீடுகளிலும் போர்வெல்கள் போடப்பட்டுள்ளதாக புகார்கள் வெடிக்கின்றன.
இதெல்லாம் மட்டும்தானா? அரசு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் தகுதியிருந்து சீட் கிடைக்கவில்லை என்று இதுவரை சில அம்மாக்களும், சில மாணவிகளும் சாவை தழுவியுள்ளனர். இது குறித்து எந்த விசாரணையும் இதுவரையில் இல்லை. அரசு வேளாண்மை பல்கலையில் அட்மிஷனில் முறைகேடு என்று பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்துமளவுக்கு சூழல் சீர்கெட்டு கிடக்கிறது.
கல்வித்துறையில் நாடே திரும்பிப் பார்க்குமளவுக்கு புரட்சி செய்வதாக பீற்றிக் கொள்ளும் அரசாங்கம், கொடுத்திருக்கும் இலவச சீருடைகளை அணிய முடியாமல் பல இடங்களில் குழந்தைகள் தவிக்கிறார்கள். பட்டன் இல்லை, காஜா இல்லை, கையில் ஓட்டை, காலர் இல்லை மொத்தத்தில் இது டிரெஸ்ஸே இல்லை என்று மனம் வெம்பி புழுங்குகிறது ஏழை சனம்.
மாஜி கவுன்சிலர் முதல் தற்போதைக்கு ஆளும் முதல்வர் வரை யாருமே எந்த அதிகாரியையும் கேள்வி கேட்காததாலும், கேள்வி கேட்க திராணி இல்லாததாலும் அரசுத்துறையின் ஒவ்வொரு மட்டத்திலும் லஞ்சம் பிய்த்து தின்கிறது மக்களை.
சம அளவிலான பயணத்திற்கு பல இடங்களில் அரசு பேருந்தை விட ஐந்து ரூபாய் வரை அதிகம் கட்டணம் வசூலிக்கின்றன தனியார் பேருந்துகள். தெரிந்தும் இதை தட்டிக்கேட்க துணிவில்லை போக்குவரத்து துறைக்கு.
மருத்துவம், காவல்துறை, விவசாயம் என்று அத்தனை முக்கியமான துறைகளிலும் ஜெயலலிதா மரணத்திற்கு பின் ‘ஒழுங்கு நடவடிக்கை பயம்’ என்பது அறவேயில்லாமல் ஆளாளுக்கு ஆட்டம் போடுவது வாடிக்கையாவிட்டது. ஆளும் அரசியல் தரப்பும் கடிவாளமற்ற குதிரையாக அலைபாய்வதால் எதிலும் நிதானமிழந்து தவிக்கிறது தமிழ்நாடு.
இந்த சூழல் தமிழ்நாடுக்கு தற்காலிக பின்னடைவு மட்டுமல்ல. வேரே அழுக ஆரம்பித்திருப்பதால் எதிர் வரும் வருடங்களில் நாம் சந்திக்கப்போகும் கஷ்டங்களை கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை.
இப்போது புரிகிறதா?...சாமான்யன் கேட்கும் கேள்விக்கான அவசியம்!