
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்ப சலனம் காரணாமாக சென்னையல் மழை பெய்துள்ளதாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் எஸ்.பி.தம்பி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மழை பொய்த்துப் போனதையடுத்து கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதியே கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது.
தமிழகத்தில் இது வரை பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில் அடுத்த வாரத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதைதொடர்ந்து வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னையில் நேற்று மாலை ஆரம்பித்த கனமழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது.
ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, ஆலந்துார், தாம்பரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், பள்ளிக்கரனை, நுங்கம்பாக்கம், எழும்பூர், சைதாபேட்டை, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு சென்னை சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கனமழை பெய்து வந்தது. இதனால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் வானிலை ஆய்வு மைய தலைவர் எஸ்.பி. தம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்ப சலனம் காரணாமாக சென்னையல் மழை பெய்துள்ளதாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
பருவ மழை தற்போது பெய்வதை விட அதிகாக பெய்வதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.