பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் டெல்லி பயணம் தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளன
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லியில் இருந்து நேற்று இரவு திரும்பியபோதே சற்று இறுக்கமான முகத்துடன் தான் அண்ணாமலை காணப்பட்டார். இதுகுறித்து விசாரிக்கும் போது பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன.
டெல்லி கிளம்புவதற்கு முன்பு, மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது என அண்ணாமலை கூறினாலும், பதவி பறிக்கப்பட்டு விடுமோ என்ற பதற்றம் அவருக்கு இருந்ததாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசனின் பெயர் அடிபடும் நிலையில், தற்போதைக்கு அண்ணாமலையின் பதவிக்கு சிக்கல் இல்லை என்கிறார்கள்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு
அண்மைக்காலமாகவே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ளது. இந்த கூட்டணியை மீண்டும் அமைப்பதற்கு இரண்டு தரப்பிலுமே சில விருப்பம் காட்டி வரும் நிலையில், கூட்டணி முறிவில் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்க முனைப்பு காட்டி வரும் பாஜக, கூட்டணியை பலப்படுத்துவதுடன், புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கவும் முயற்சித்து வருவதற்கிடையே, திடீர் திருப்பமாக, பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டுள்ளது அக்கட்சி மேலிடத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதிமுக இந்த அதிரடி முடிவை எடுக்கும் என்று டெல்லி பாஜக சற்றும் எதிர்பார்த்திருக்காது என்கிறார்கள். அப்படியிருந்திருந்தால், சமீபத்தில் அதிமுக மூத்த தலைவர்களின் டெல்லி விசிட்டையும், அதற்கு முன்பு எடப்பாடியின் டெல்லி பயணத்தையும் அக்கட்சி சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கும் என சுட்டிக்காட்டுகிறார்கள்.
கூட்டணி முறிவுக்கு என்ன காரணம்?
அதிமுக - பாஜக கூட்டணி முறிவின் பின்னணியில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தங்கள் கட்சியையும் கட்சி தலைவர்களையும் விமர்சித்ததால் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக அதிமுக அறிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான விமர்சனங்களை அண்ணாமலை முன்வைத்தபோது, அதிமுக தலைவர்கள் பெரிதாக எதிர்வினையாற்றவில்லை. மாறாக, டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் மோடிக்கு பக்கத்தில் சிரித்தபடியே எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்தார்.
அதேசமயம், பேரறிஞர் அண்ணா மீதான அண்ணாமலையில் விமர்சனத்துக்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக பதிலடி கொடுத்தனர். கூட்டணியும் உடைந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன என்பது பற்றித்தான் பெரிதாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் வைத்து எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது, தனக்கு கிடைத்த தரவுகளை வைத்து 25 தொகுதிகள் வரை பாஜகவுக்கு அமித் ஷா கேட்டதாகவும், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என கூறியதாகவும், கூட்டணி கட்சிகளுக்கு சீட்டுகளை நாங்கள் பிரித்துக் கொடுத்துக் கொள்கிறோம் என கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், பாஜகவுக்கு அத்தனை இடங்களை கொடுக்கவும், டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பம் இல்லை எனவும் தெரிகிறது. இந்த நிலையில், அண்ணாமலையின் கருத்தை பூதாகரமாக்கி கூட்டணியை அதிமுக உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம், ஒருவேளை மீண்டும் கூட்டணிக்கு பாஜக வந்தால், குறைவான இடங்களுக்கு அக்கட்சி இறங்கி வரும் என அதிமுக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கூட்டணி முறிவால் என்ன நன்மை?
இதுஒருபுறமிருக்க, இந்த கூட்டணி முறிவு இரண்டு கட்சிகளுக்குமே சாதகம்தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். பாஜகவை கூட்டணியில் வைத்துக் கொண்டிருப்பதால், அக்கட்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் தமிழ்நாட்டில் கடந்த கால தேர்தல்களில் அதிமுகவால் சோபிக்க முடியவில்லை. அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்தால் இரு கட்சிகளுமே தமிழகத்தில் ஜொலிக்க முடியாது என்பது பாஜக தலைமைக்கு நன்கு தெரியும். எனவேதான் தனித்து களமாடி பாஜகவின் செல்வாக்கை உயர்த்துவதுடன், தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் அல்லது அதிமுகவை அரவணைத்து ஆதரவாக இருக்க வைத்துக் கொள்ளலாம் என்பது பாஜகவின் திட்டமாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கூட்டணி முறிவு அறிக்கையில் பாஜக தேசியத் தலைவர்கள் குறித்தோ அல்லது அக்கட்சியின் கொள்கைகள் குறித்தோ அதிமுக குறிப்பிடவில்லை. இதுவே, மேம்போக்கான இந்த கூட்டணி முறிவுக்கு சிறந்த உதரணமாக இருக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாடு என்பது நீண்டகால இலக்கு. எனவே, தனித்து நின்றால் பாஜகவின் செல்வாக்கு என்னவாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
அதேசமயம், இந்த பிளவு இரு கட்சிகளும் தங்களின் ஆதரவுத் தளத்தை அப்படியே வைத்திருக்க உதவும் என்றும், தங்களது செல்வாக்கை விரிவுபடுத்தவும் பாஜகவிற்கு இது உதவும் என்றும் பாஜகவில் ஒரு பிரிவினர் கூறுகின்றனர். ஆனால், மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் திட்டத்துக்கு இது கைகொடுக்குமா என அக்கட்சியில் மற்றொரு பிரிவினர் கேள்வி எழுப்புகின்றனர். கர்நாடகா தேர்தலில், தனது ஆதரவு தளத்தை பாதுகாக்க தனித்து போட்டியிடுவது என்ற மதசார்பற்ற ஜனதாதளத்தின் திட்டம் பலிக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அண்ணாமலையின் பதவிக்கு ஆபத்தா?
தமிழகத்தில் அண்ணாமலையின் தலைமை குறித்து பாஜகவிலேயே இரண்டு விதமாக கருத்துகள் நிலவுகின்றன. ஒருசாரார் அவரை மாற்ற வேண்டும் எனவும், மற்றொரு தரப்பினர் அவரை மாற்றக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர். அவரது ஆக்ரோஷமான தோரணை சரியல்ல என ஒரு தரப்பினரும், மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடித்தால் தமிழ்நாட்டில் கட்சி சிறப்பாக செயல்படும் என மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.
இந்த சூழலில், கூட்டணி முறிவை பயன்படுத்து, அதற்கு முக்கியக் காரணமான அண்ணாமலையை மாற்றக் கோரி அவரது எதிர்கோஷ்டியினர் டெல்லிக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது. அண்ணாமலைக்கு பதிலாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் பெயர் முன்னணியில் உள்ளது. ஆனால், இவை எதுவுமே இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், தற்போதையை நிலவரப்படி, அண்ணாமலையின் பதவிக்கு ஆபத்து இல்லை என்றே டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் முற்றும் பட்சத்தில் எதுவும் நடக்க வாய்ப்புள்ளது.
டெல்லியில் என்ன நடந்தது?
இந்த பின்னணியில்தான் அண்ணாமலை டெல்லி சென்றார். தமிழக நிலவரம், அதிமுக கூட்டணி முறிவு குறித்து ஏற்கனவே நிர்மலா சீதாராமனிடம் விளக்கமான அறிக்கையை பெற்ற பின்னரே அண்ணாமலையை டெல்லி புறப்பட்டு வரச்சொல்லியுள்ளது பாஜக மேலிடம் என்கிறார்கள். அதன்படி, டெல்லி சென்ற அவரை பாஜக மேலிடத் தலைவர்கள் உடனடியாக சந்திக்கவில்லை. ஒருநாள் காத்திருப்புக்கு பின், நிர்மலா சீதாராமனை சந்தித்து அவரிடம் விளக்கம் அளித்துள்ளார் அண்ணாமலை. நிர்மலா சீதாராமனிடம் அவர் என்ன சொன்னார் என்பதை கேட்ட பிறகே அவரை பாஜக டெல்லி தலைமை சந்தித்துள்ளது.
அதிமுக உடனான கூட்டணி முறிவினால் கோபத்தில் இருக்கும் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சரும், தேர்தல் ராஜதந்திரியுமான அமித் ஷா ஆகியோர் அண்ணாமலையை சந்திக்கவில்லையாம். இதனால் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை மட்டுமே அண்ணாமலை சந்தித்துள்ளார். மேலும், சில மூத்த தலைவர்களையும் அவர் சந்தித்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது, அதிமுக கூட்டணியை தொடர பாஜக மேலிடம் விரும்பினாலோ, தன்மீது தவறு இருக்கும்பட்சத்திலோ தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பாஜக தலைமையிடம் அண்ணாமலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், அதனை ஏற்க மறுத்த பாஜக டெல்லி தலைமை, இனிமேல் இதுபோன்று நடக்கக்கூடாது என அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், தற்போது ராஜினாமா செய்தால், அதிமுகவினருக்காக இறங்கிப் போனதுபோல ஆகிவிடும். எனவே ராஜினாமா செய்ய வேண்டாம். தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துங்கள். அதிமுக குறித்தோ கூட்டணி குறித்தோ பேச வேண்டாம் என அறிவுறுத்தி அனுப்பியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போதைக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதால், தமிழ்நாட்டில் தனி அணி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில், தனி அணி அமைப்பதா அல்லது கூட்டணி அமைப்பதா என்பதை பார்த்துக் கொள்ள திட்டமிட்டிருக்கும் பாஜக, இதற்கிடையே அதிமுகவுடன் சமரசம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.