#Breaking:பள்ளிச்சுவர் இடிந்து விழுந்து விபத்து.. மூன்று பேர் கைது.. அமைச்சர் தகவல்..

Published : Dec 17, 2021, 07:31 PM IST
#Breaking:பள்ளிச்சுவர் இடிந்து விழுந்து விபத்து.. மூன்று பேர் கைது.. அமைச்சர் தகவல்..

சுருக்கம்

நெல்லை அரசு உதவி பெறும் பள்ளியின் கழிவறை சுவர் இடித்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான நிலையில், விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளது. அதன்படி  பள்ளியின் தாளாளர், பள்ளி தலைமையாசிரியை மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.  

நெல்லை டவுன் எஸ்.என்.ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து தற்போது மாணவர்கள் நேரடியாக சென்று கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வழக்கம்போல மாணவர்கள் பள்ளிக்கு சென்றபோது காலை 11 மணியளவில் இடைவேளை நேரம் வந்தது. அப்போது மாணவர்கள் கழிவறைக்கு செல்லத் தொடங்கினர். திடீரென கழிவறையின் தடுப்புச் சுவர் இடிந்து அங்கு நின்ற மாணவர்கள் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த சக மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றொரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 4 மாணவர்கள் காயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த துயர சம்பவத்தையடுத்து, உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா பத்து லட்சம் ரூபாயும், காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட அவர் உத்தரவிட்டார். 

இதனை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த விபத்து தொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர பள்ளி கல்வித்துறை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளியில் விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 9-ஆம் வகுப்பு மாணவர் அன்பழகன், 8ஆம் வகுப்பு மாணவர் விஷ்வ ரஞ்சன், 6ஆம் வகுப்பு மாணவர் சுதீஸ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அவர்களது விவரங்களை பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. 

இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் உறுதித்தன்மை இல்லா கட்டிடங்களை உடனடியாக இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில்  தற்போது கழிவறை சுவர் இடித்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான நிலையில், விபத்து தொடர்பாக பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமையாசிரியை ஞான செல்வி மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்.. 2.18 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..