நெல்லை பள்ளி விபத்து எதிரொலி… உறுதித்தன்மை இல்லா கட்டிடங்களை உடனே இடியுங்கள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!

Published : Dec 17, 2021, 05:31 PM ISTUpdated : Dec 17, 2021, 05:32 PM IST
நெல்லை பள்ளி விபத்து எதிரொலி… உறுதித்தன்மை இல்லா கட்டிடங்களை உடனே இடியுங்கள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!

சுருக்கம்

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் உறுதித்தன்மை இல்லா கட்டிடங்களை உடனடியாக இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் உறுதித்தன்மை இல்லா கட்டிடங்களை உடனடியாக இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திருநகர் பகுதியில் அமைந்துள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். விளையாட்டு பாட வேளையில் விளையாடுவதற்காக மைதானத்திற்கு வந்தபோது கழிவறை சுற்றுசுவர் இடிந்து விழுந்து இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளியில் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில், அடித்தளம் இல்லாமல் கட்டப்பட்டிருந்ததால் இடிந்து விழுந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். அதேசமயம் நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளை ஆய்வு செய்ய சிறப்பு குழுவும்  அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் அன்பழகன், விஸ்வ ரஞ்சன், சுதீஷ் ஆகியோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காயமடைந்த சஞ்சய், இசக்கி பிரகாஷ், ஷேக் அபுபக்கர், அப்துல்லா ஆகிய  4 மாணவர்களுக்கும் ரூபாய் 3 லட்சம் நிவாரண உதவியாக அளிக்கப்படும் என்றும் அத்துடன் இந்த துயர சம்பவத்தை அறிந்து மிகவும் வேதனையுற்றதுடன்,  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆறுதலை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும்  முதல்வர் தனது அறிவிப்பில்  குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் உறுதித்தன்மை இல்லா கட்டிடங்களை உடனடியாக இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லையில் பள்ளி கட்டடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

கட்டிடத்தின் உறுதித் தன்மையை அறியும் வகையில் இன்ஜீனியர்களையும் பள்ளிக் கல்வித்துறையை சார்ந்திருக்கிற உயர் அதிகாரிகளையும் கொண்ட ஒரு குழு உடனடியாக அமைக்கப்பட்டு அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று நடந்தது போலான துரதிர்ஷ்ட சம்பவம் ஒன்று இனிமேல் என்றும் நடைபெறக் கூடாது என்றும் அவர் கூறினார். விபத்து குறித்து தகவல் அறிந்த நெல்லை எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் விபத்து நடந்த பள்ளியை நேரில் பார்வையிட்டார். சுவரின் அடித்தளம் உறுதியாக இல்லாததால் இந்த விபத்து நடந்திருப்பதாக அவர் கூறினார். நெல்லை காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன், விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சுவர் விபத்து குறித்து மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைக்குப் பின் முழுவிவரம் தெரியவரும் என தெரிவித்தார். மேலும் விபத்து குறித்து பள்ளித தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்
வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு