
சென்னை: தமிழ்நாட்டில் அவசர மருத்துவ உதவிக்காக இயக்கப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான காத்திருப்பு நேரம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. சாலைப் பணிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் இருந்தபோதிலும், சராசரியாக 7.57 நிமிடங்களுக்குள் சேவை கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இ.எம்.ஆர்.ஐ. கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் சுமார் 6 ஆயிரம் ஊழியர்களுடன் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவசர மருத்துவ உதவிக்காக தினமும் கட்டுப்பாட்டு அறைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன.
சமீபகாலமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் மேம்பால கட்டுமானப் பணிகள் மற்றும் இதர சாலைப் பணிகள் காரணமாக ஆம்புலன்ஸ்கள் அவசர இடங்களுக்கு விரைந்து செல்வதில் காலதாமதம் ஏற்படும் சூழல் நிலவியது. இந்தச் சவால்களை எதிர்கொண்டு, தற்போது விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதற்கான சராசரி காத்திருப்பு நேரம் 7.57 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதற்காக, அதிக விபத்துகள் நடக்கும் இடங்கள், அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள் மற்றும் குடிசைப் பகுதிகள் ஆகியவை 'ஹாட் ஸ்பாட்'டுகளாக (Hot Spots) கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முக்கிய பகுதிகளில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதால், கட்டளை மையத்திற்கு அழைப்புகள் வரும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட இடத்தை உடனடியாக அணுகுவதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த மேம்பட்ட வசதிகள் மூலம், சென்னையில் 5 நிமிடங்களுக்குள்ளும், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 7 நிமிடங்களுக்குள்ளும், பிற மாவட்டங்களில் 8 நிமிடங்களுக்குள்ளும் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பெற முடியும் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அவசர காலங்களில் மக்கள் விரைந்து மருத்துவ உதவியைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.