
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக த.வெ.க.வின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம். நிர்மல்குமார் என்பவரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக கரூர் டவுன் போலீசார், த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (49), பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்ட சிலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வழக்கின் விசாரணைக்குப் பின், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மாவட்டச் செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி கைது செய்தனர். மேலும், மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்திற்காக த.வெ.க. கரூர் நகரப் பொறுப்பாளர் மாசி என்கிற பவுன்ராஜையும் (34) போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் குறித்துக் கடுமையான கண்டனங்களை முன்வைத்ததாகத் தகவல் வெளியானது.
நீதிபதி குறித்து அவதூறு
நீதிபதி கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகள் பரப்பப்பட்டு வந்தன. இந்த அவதூறுகளைப் பரப்பியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகப் பதிவிட்டதாகக் கூறி, திண்டுக்கல் தெற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் எஸ்.எம். நிர்மல்குமார் என்பவரை சாணார்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கைது சம்பவம், த.வெ.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.