
ஈரோடு
ஈரோட்டில், சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல்லி விழுந்த சத்துணவைச் சாப்பிட்ட 55 மாணவர்களுக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஏற்பட்டதால் ஈரோடு மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 505 மாணவர்களில், 145 மாணவர்கள் பள்ளியில் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே சத்துணவு வழங்கப்படும் நிலையில், உணவு மீதமிருந்தால் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களும் வழங்கப்படுமாம்.
இந்த நிலையில், நேற்று மதியம் வழக்கம்போல மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பிளஸ் 2 மாணவர் கனகவேல் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவில் பல்லி கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் பரவியதால் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதற்குள் ஐந்து மாணவர்களுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. பல மாணவர்கள் தலை சுற்றுவதாகக் கூறி தரையில் படுத்துக் கொண்டனர். பணியில் இருந்த ஆசிரியர்கள் உடனடியாக அவசர ஊர்தி, தனியார் வாகனங்கள் மூலம் உடல்நலம் பாதிக்கப்பட்ட 55 மாணவர்களை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனையடுத்து, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், சிகிச்சைப் பெற்று வரும் மாணவர்களையும், பெற்றோர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதுதொடர்பாக ஆட்சியர் பிரபாகர் கூறியது:
“சிவகிரி அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 55 மாணவர்களுக்கு தலை சுற்றல், வாந்தி ஏற்பட்டதாக புகார் வந்ததையடுத்து, அனைவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், நான்கு மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். அந்த நான்கு மாணவர்களுக்கு இன்னும் தலைச்சுற்றல் இருப்பதாகக் கூறியதையடுத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றார்.