
திண்டுக்கல்
ஸ்மார்ட் ரேசன் கார்டு தொலைந்து போயிருந்தாலோ அல்லது சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலோ அரசு இ-சேவை மையங்களில் ரூ.30 செலுத்தி புதிய ஸ்மார்ட் கார்டை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு இ-சேவை மையங்களில், புதிய மின்னனு குடும்ப அட்டை (ஸ்மார்ட் ரேசன் கார்டு) உள்ள விவரங்களை திருத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து நேற்று ஆட்சியர் டி.ஜி.வினய் நேரில் ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர், “திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கார்டுகளில் உள்ள விவரங்களை திருத்தங்கள் செய்யும் பணி அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் நடைபெற்று வருகிறது.
எனவே இ-சேவை மையங்களில் www.tnpds.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஸ்மார்ட் கார்டில் உள்ள பெயர்களை நீக்குதல், குடும்ப அட்டையின் வகையை மாற்றம் செய்தல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விவரத்தை மாற்றம் செய்தல், முகவரி மாற்றம், குடும்பத்தலைவர் பெயர் மாற்றம் செய்தல் ஆகிய சேவைகளுக்கு ரூ.60 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
முகவரி மாற்றம் செய்ய வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி ரசீது, எரிவாயு நுகர்வோர் அட்டை, தொலைபேசி ரசீது, மின்சார ரசீது போன்ற ஏதாவது ஒரு ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து மாற்றிக் கொள்ளலாம். பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களில் உள்ள முகவரியும், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட முகவரியும் சரியானதா? என ஒப்பிட்டு உறுதி செய்தபின்னர் வட்ட வழங்கல் அலுவலரால் ஒப்புதல் வழங்கப்படும்.
ஏற்கனவே பெறப்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டு தொலைந்து போயிருந்தாலோ அல்லது சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலோ அரசு இ-சேவை மையங்களில் ரூ.30 செலுத்தி புதிய ஸ்மார்ட் கார்டை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு பழைய ரேசன் கார்டில் பதிவு செய்துள்ள கைப்பேசி எண்ணை தெரிவிக்க வேண்டும். அந்த கைப்பேசி எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்த கூடிய கடவுச்சொல் அனுப்பப்படும்.
அந்த கடவுச் சொல்லை பயன்படுத்தி புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கப்படும். பழைய ரேசன் கார்டில் பதிவு செய்த கைப்பேசி எண் தெரியாதவர்கள் சம்பந்தப்பட்ட தனிதாசில்தார் (குடிமை பொருள்) அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். மேலும் கைப்பேசி எண்ணையும் மாற்றம் செய்தும் பயன்பெறலாம்” என்று கூறினார்.