
சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் வாக்கு திருட்டு விவகாரங்கள் குறித்து தீவிரமாக கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய செல்வப்பெருந்தகை, “மின்னணு வாக்கு இயந்திரம் கண்டுபிடித்த நாடே அதை பயன்படுத்தவில்லை. எனவே இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் வாக்கு சீட்டு முறை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். வாக்குச்சீட்டுகள் கொண்டு வருவதற்கு எந்த நடைமுறை சிக்கலும் இல்லை. முன்னர் பல தேர்தல்களிலும் இதுவே பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் அவர், “வாக்கு திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தி நாடு முழுவதும் போராடி வருகிறார். பாஜக தலைவர்களே தவறு நடந்துள்ளது என ஒப்புக்கொள்கிறார்கள். விவகாரத்தில் மக்களிடையே பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது. வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி திருநெல்வேலியில் வாக்கு திருட்டை கண்டித்து பெரிய மாநாடு நடைபெறும்; இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவில் மக்களுக்கு மீதமிருக்கும் ஒரே உரிமை வாக்குரிமை தான்; அதை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பறிக்க முயற்சிக்கின்றனர்” என்று குற்றம்சாட்டினார். பொருளாதாரத்தைப் பற்றியும் அவர் கடுமையாக விமர்சித்தார். “அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்திருப்பது இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். கொள்கை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது” என்றார்.
வாக்கு திருட்டுக்கு எதிரான ராகுல் காந்தியின் நடவடிக்கையை மடைமாற்றம் செய்யும் வகையில் திருவள்ளூர் எம்பி சசிகாந்தின் செயல் உள்ளது. ஆகவே ராகுல் காந்தியின் போராட்டத்தை முன்னிறுத்த வேண்டும். தற்போது சசிகாந்த் போராட்டத்தை கைவிட வேண்டும். ராகுல் காந்தியின் வாக்கு திருட்டை மக்கள் எல்லா தெருக்களிலும், வீடுகளிலும் பேச வேண்டும்” என்று உளறி பேசினார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.