
மரங்கள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நாம் தமிழர் கட்சியின் மரங்களின் மாநாடு நடைபெற்றது. மரங்களுக்கு நடுவே அமைக்கப்பட்ட மேடையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை.
தமிழகத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் 10 மரங்களை நடும் மாணவர்களுக்கு அவர்களின் தேர்வில் 10 மதிப்பெண் வழங்குவேன். பொதுவாக உள்ளூர் மாடு விலைபோகாது என்பதைப் போன்று மரங்கள், இயற்கை வளங்கள் குறித்து நான் பேசுவதை யாரும் கண்டுகொள்வதில்லை. அதே நேரத்தில் நான் கூறிய கருத்துகளை ஆங்கிலத்திலோ, இந்தியிலோ சொன்னால் அதனை புகழ்ந்து உச்சி முகர்கின்றனர்.
யாரும் எழுதி கொடுத்ததை நான் பேசவில்லை. உள்ளத்தில் இருந்து பேசுகிறேன். நடிகர்கள் தங்கள் ஒப்பனையை அழித்த உடனேயே அரியணையில் அமர வேண்டும் என்று நினைப்பதை ஏற்க முடியுமா? திரை போதைக்கு எதிராக பேச தற்போது இங்கு யாரும் இல்லை” என்று பேசினார்.