
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு:
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 மாணவர்களிடம் சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையிலான குழு விசாரணை நடத்தினர்.விருதுநகரில் பட்டியிலனத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி தனிமையில் இருப்பதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி ஹரிஹரின் மற்றும் அவர்களது நண்பர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் சிறார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைதுசெய்யப்பட்ட ஹரிஹரன், திமுக நிர்வாகி ஜூனத்அகமது, பிரவீன், மாடசாமி ஆகிய நான்கு பேர் மதுரை மத்திய சிறையிலும், சிறுவர்கள் 4 பேரும் ராமநாதபுரத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டினர்.
சிபிசிஐடி விசாரணை:
இதுக்குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர், பொள்ளாச்சி சம்பவம், சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவங்கள் போல் அல்லாமல் விருதுநகர் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையும் பெற்று தரப்படும். விரைந்து தண்டனை வாங்கி கொடுப்பதில், தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருப்போம் என்று அவர் கூறினார்.
இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையிலான குழு விசாரணையில் இறங்கியது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் 2 நாள்கள் விசாரணை நடத்தினர். கைதுசெய்யப்பட்ட 8 பேரின் வீடுகள் மற்றும் சம்பவ நடந்த இடங்களிலும் சோதனை நடத்தினர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவம் நடந்த மருந்து குடோனுக்கு நேரில் அழைத்து வந்து டிஎஸ்பி வினோதினி தலைமையில் சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, 4 மாணவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
வேகமெடுக்கும் விசாரணை- கைபற்றப்பட்ட ஆவணங்கள்:
ஏற்கனவே பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணை, வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் சிறார்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரின் வீடுகளில் நடத்தப்பட சோதனையில் கைப்பற்றப்பட்ட செல்போன், மெமரிகார்டு, லெப்டாப் ஆகியவற்றை ஆய்வு செய்து அவர்களின் பேஸ்புக், வாட்ஸ் அப், டெலிகிராம் ஆகிய சமூகவலைதள பக்கங்களின் குழுக்களில் இடம்பெற்றவர்களிடமும் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள், உரையாடல்கள் உள்ளிட்டவை குறித்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் மீட்பது குறித்து விசாரணை நடத்தவும் சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.