விருதுநகர் சாலை விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி

Published : Jun 03, 2025, 06:48 PM IST
mk stalin

சுருக்கம்

விருதுநகர் சாலை விபத்தில் உயிரிழந்த சோணைமுத்து குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்த மூன்று மகள்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

விருதுநகர் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மகள்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், அம்பனேரி கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்து குறித்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்ததாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், அம்பனேரி கிராமத்தைச் சேர்ந்த திரு. சோணைமுத்து, த/பெ. மாசிலாமணி (வயது 46) என்பவர், தனது மகள்கள் செல்வி. மதுமிதா (வயது 15), செல்வி. சுஷ்மிதா (வயது 13) மற்றும் செல்வி. அஜிதா (வயது 10) ஆகியோருடன் கடந்த ஜூன் 1, 2025 அன்று மேலக்கண்டமங்கலம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் திரு. சோணைமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செல்வி. மதுமிதா, செல்வி. சுஷ்மிதா மற்றும் செல்வி. அஜிதா ஆகிய மூவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செல்வி. மதுமிதா என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செல்வி. சுஷ்மிதா மற்றும் செல்வி. அஜிதா ஆகிய இருவருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் என மொத்தம் ஐந்து லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்."

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி