
புனித அந்தோணியார் ஆலயத்திற்கு பாத யாத்திரை
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வரதராஜன்பேட்டை கிராமத்தை சேர்ந்த இருதயசாமி, ஸ்டெல்லா மேரி, சகாய மேரி, அமுதன், சார்லஸ் லுவாங்கோ, ரோஸ்லின் மேரி, ஆனந்தி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தங்கள் ஊரில் இருந்து நேற்று இரவு கள்ளக்குறிச்சி மேல்நாரியப்பனூர் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்திற்கு பாத யாத்திரை சென்றுள்ளனர்.
3 பேர் சம்பவ இடத்திலேயே பலி
இந்நிலையில் கடலூரின் மணலூர் பகுதியில் இன்று அதிகாலை பாத யாத்திரையாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது சாலையில் அதி வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் தூக்கி வீசப்பட்டதில் இருதயசாமி அவரது மகள் சகாய மேரி மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த ஸ்டெல்லா மேரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
4 பேர் படுகாயம்
மேலும் அமுதன், சார்லஸ் லுவாங்கோ, ரோஸ்லின் மேரி, ஆனந்தி ஆகிய 4 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீஸ் விசாரணை
மேலும் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி விபத்தில் 3 பேர் உயிரிாந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.