
விவசாயிக் கடன் பெற சிபில் ஸ்கோர் : விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருப்பது வேளாண் கடன், அந்த வகையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் அதிகளவு கடன்களை பெற்று வருகிறார்கள். அந்த நிலையி்ல கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு நிதியாண்டில் (2025-26) கே.சி.சி. கடன் விண்ணப்பிக்கும் உறுப்பினர்கள் இதர வணிக வங்கிகளில் கே.சி.சி. கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கடன் பெறவில்லை/கடன் நிலுவையில்லை என்பது குறித்து உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்கான வழிகளில் ஒன்றாக சம்பந்தப்பட்ட உறுப்பினரின் CIBIL Statement பெற்று உறுதி செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நகரங்களின் பெருகிய மக்கள் தொகை, இட நெருக்கடி, வாடகை உயர்வு, சொந்த வீடு கனவு, தூய்மையான சுற்றுச்சூழல் ஆகிய காரணங்களுக்காக புறநகர் விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டன. இதனால், விளைநிலங்கள் எல்லாம் கான்கிரீட் தளங்களாக மாறி வருகின்றன. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்றாற்போல விவசாய உற்பத்தி தற்போது இல்லை. தமிழ்நாட்டில் பெரும்பாலான விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் கும்பல்களிடம் சென்றுவிட்டது.
எஞ்சியுள்ள விளைநிலங்களின் வாயிலாக தான், தற்போது அரிசி, ராகி, கம்பு மற்றும் காய்கறிகள் மனிதனின் தேவைக்கு உற்பத்தி செய்யப்பட்டு வரப்படுகிறது. பற்றாக்குறைக்கு பிற மாநிலங்களிடையே கையேந்த வேண்டிய அவலம் இருக்கிறது. மேலும், நீர் நிலைகளின் பாசன கால்வாய்களும், ரியல் எஸ்டேட் கும்பல்களின் அகோர பசிக்கு இரையாகிப் போனது. இதனால் இங்கு விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளதோடு நீர் ஆதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ தேவை என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வங்கிகளில் ‘சிபில் ஸ்கோர்’ அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என சுற்றறிக்கையை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சமீபத்தில் அனுப்பியுள்ளார். இந்நடவடிக்கை கடும் கண்டத்துக்குரியது. விவசாயிகளுக்கு 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் கடன் என்ற அறிவிப்பு கடுமையான நெருக்கடியை உருவாக்கும். தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையின் அறிவிப்பு என்பது, எஞ்சியுள்ள விளைநிலங்களையும், விவசாயிகளையும் முற்றிலுமாக வெளியேற்றும் திட்டமே, தவிர நன்மையொன்றும் நடக்கப் போவதில்லை.
நீரில்லாமலும் மழையில்லாமலும் போட்ட முதலீட்டைக் கூட எடுக்க முடியாமலும் கடனாளியாகும் போது எப்படியேனும் நிலத்தை விற்றே ஆக வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கும் இச்சூழலில், ‘சிபில் ஸ்கோர்’ அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பு, ஒட்டுமொத்த விவசாயிகளையும் வேளாண்மையில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியே!
ஒருபுறம் வேளாண் துறை கென்று தனி நிதிநிலை அறிக்கை, மறுபுறம் விவசாயிகளுக்கு சலுகை வழங்குவதில் புதிய புதிய நிபந்தனைகள். இது என்ன ஒரு முரண்பாடு! எனவே, கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வங்கிகளில் ‘சிபில் ஸ்கோர்’ அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.