ஒரு மாதத்திற்கும் மேல் குடிநீர் இல்லாமல் சிரமப்படும் கிராம மக்கள் -  ஆட்சியரிடம் முறையீடு...

First Published Apr 11, 2018, 9:34 AM IST
Highlights
Villagers who are struggling with drinking water for more than a month - appeal to the collector...


நாமக்கல் 

ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் இல்லாமல் சிரமப்படும் கிராம மக்கள் நாமக்கள் ஆட்சியரிடம் நேரில் சென்று முறையிட்டனர்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், போக்கம்பாளையம் ஊராட்சி, கல்லுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில், "கல்லுப்பாளையம் கிராமத்தில் 500 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகிறோம். 

எங்கள் கிராமத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கிராமத்தில் மூன்று மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளிலிருந்து நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.  ஆனால், கடந்த ஒரு மாதத்துக்குமேல் முற்றிலுமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தப் பலனும் இல்லை. எங்கள் கிராமத்தில் குடிநீருக்கென அமைக்கப்பட்ட இரண்டு ஆழ்துளைக் கிணறுகளும் முற்றிலுமாக வறண்டு விட்டது. 

இந்த நிலையில், இப்போது 500 லிட்டர் தண்ணீரை ரூ.450 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அருகில் உள்ள போக்கம்பாளையத்துக்கு நாள்தோறும் காவிரி தண்ணீர் வரும் நிலையில், திட்டமிட்டு எங்கள் கிராமத்துக்கு  தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கருதுகிறோம். 

எனவே, ஆட்சியர் தலையிட்டு கல்லுப்பாளையம் கிராமத்துக்கு தினமும் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்று அதில் கூறியிருந்தனர். 

அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

click me!