குறைந்தபட்ச ஊதியம் கேட்டு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்; 160 பேர் கைது...

First Published Apr 11, 2018, 9:12 AM IST
Highlights
Rural Strike for Rural Development Workers Minimum Wage List 160 people arrested


நாகப்பட்டினம்

அரசு அறிவித்தபடி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று நாகையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 30 பெண்கள் உள்பட 160 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலையா, மாவட்ட பொருளாளர் மணி, சி.ஐ.டி.யூ. சங்க மாவட்ட செயலாளர் சீனிமணி, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தப் போராட்டத்தில், "ஊராட்சிகளில் பணிபுரியும் நீர்த்தேக்கத்தொட்டி ஆபரேட்டர்களுக்கு மாத ஊதியமாக ரூ.11 ஆயிரத்து 236.16 வழங்க வேண்டும். அதேபோல துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.9 ஆயிரத்து 234.16 வழங்க வேண்டும். 

ஆனால் தற்போது மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 720-ம், துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 560-ம் வழங்கப்படுகிறது. 

எனவே, தமிழக அரசு அறிவித்த படி, ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும்.

7-வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் 1.1.2016 முதல் ஓய்வுபெறும் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் பணிக்கொடையும், மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியமும் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் 30 பெண்கள் உள்பட 160 பேரை கைது செய்தனர். 

click me!