
மானாமதுரையில், சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் உள்ள கால்வாயில் பாலம் கட்ட நிதி ஒதுக்கிய பின்பும் எதிர்ப்பு தெரிவித்த கிராமத்தினர் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சமரசம் அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை ஊராட்சியில் இருக்கிறது சின்னபுதுக்கோட்டை கிராமம். இந்த கிராமத்திற்கான சுடுகாட்டிற்கு செல்ல பிராமணக்குறிச்சி கிராம கண்மாய்க்குச் செல்லும் நீர்வரத்து கால்வாயை கடக்க வேண்டும். ஆனால், இந்த நீர்வரத்து கால்வாய் குறுக்கே பாலம் இல்லை.
மழைக்காலங்கள், நீர்வரத்து காலங்களில் சின்னபுதுக்கோட்டை கிராமத்தினர் சுடுகாட்டிற்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். இதனால் கால்வாயின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.
அவர்களது கோரிக்கையை ஏற்று பாலம் கட்ட ரூ.15 இலட்சம் செலவில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், பாலம் கட்டினால் கால்வாயில் நீர்வரத்து செல்வதில் பாதிப்பு ஏற்படும் என்று கூறி பிராமணகுறிச்சி மக்கள் பாலம் கட்டுவதை எதிர்த்தனர். இதனால் பாலம் கட்டுமான பணி கடந்த 13 ஆண்டுகளாக நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.
இத்தனை வருடங்களாக இழுபறியில் இருந்ததை, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பத்மநாபன் தலைமையிலான அதிகாரிகள் பல கட்ட சமாதான பேச்சு வார்த்தை நடத்தியபிறகு பாலம் கட்ட பிராமணக்குறிச்சி கிராமத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து பாலம் கட்டும் பணிக்கான பூமிபூசை நேற்று போடப்பட்டது. இதற்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கருப்புச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிகள் செயற்பொறியாளர் நானிலதாசன், ஒன்றிய பொறியாளர் ராஜேஸ், முன்னாள் கவுன்சிலர் ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.