
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளியை, மர்ம நபர்கள் அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டினர். காவலாளர்களின் தீவிர விசாரணைக்கு பின், மர்மநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலால்குடியை அடுத்த மாந்துறைநகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தர்மர் (57). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த, திருச்சியில் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் இசக்கியேல். இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்பகை இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தர்மர் காயம் அடைந்ததால் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
நேற்று காலை தர்மர், சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனை வார்டு பகுதிக்குள் புகுந்த இருவர், சட்டென்று தாங்கள் கொண்டுவந்த அரிவாளால் தர்மரின் தலை, முகம், தோள்பட்டை ஆகிய இடங்களில் கண்மூடித்தனமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதைபார்த்து நோயாளிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறினர்.
இதுகுறித்து தகவலறிந்த லால்குடி துணை காவல் கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையில் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த தர்மர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூக்கு, கன்னம், தாடை ஆகிய பகுதிகளில் பலத்த சேதம் அடைந்துள்ளதால், அவரை தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவலாளர்களின் முதற்கட்ட விசாரணையில், அரசு மருத்துவமனையின் உள்ளே புகுந்து தர்மரை அரிவாளால் வெட்டியவர்கள் இசக்கியேலின் மகன் வினோத் (35) மற்றும் வினோத்தின் நண்பர் மருது (31) என்பது தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் குறித்து லால்குடி காவலாளர்கள் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், ஆய்வாளர் தினேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து வினோத் மற்றும் மருதை தேடி வந்தனர்.
இந்த நிலையில் லால்குடியை அடுத்த ஆங்கரையில் பதுங்கியிருந்த மருது மற்றும் சூசையாபுரம் பகுதியில் பதுங்கி இருந்த வினோத் ஆகிய இருவரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.