
பெரம்பலூர்
மத்திய அரசு செவிலிய உதவியாளர் பயிற்சி பள்ளிகளுக்கு வழங்கும் நிதியை நிறுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில் போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில், ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று நடந்தது.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மீனாட்சி தலைமை வகித்தார்.
இந்த போராட்டத்தில், "சுகாதாரத் துறையில் சுகாதாரமையம், துணைசுகாதார மையத்தில் பி.எஸ்சி, எம்.எஸ்சி.செவிலியர் படிப்பு முடித்தவர்களை நியமனம் செய்யும் கருத்துருவை ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசு செவிலிய உதவியாளர் பயிற்சி பள்ளிகளுக்கு வழங்கும் நிதியை நிறுத்த கூடாது.
சுகாதார மையம், துணை சுகாதார மையங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
மாவட்டங்கள் தோறும் தலா 60 பேருக்கு பயிற்சி அளிக்கும் வகையில், செவிலியர் உதவியாளர் பயிற்சி பள்ளிகளை தொடங்க வேண்டும்.
3-வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாட்டை களைந்திட வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் செயலாளர் லதா, பொருளாளர் செல்வமணி உள்பட திரளான கிராம சுகாதார செவிலியர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.