
நீலகிரி
ஊட்டியில் கொட்டும் மழையிலும், ஆஷிபாவுக்கு நீதி கேட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காஷ்மீரில் சிறுமி ஆஷிபாவை கற்பழித்து கொடூரமாக கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆஷிபாவுக்கு நீதி கேட்டும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் சமது தலைமை தாங்கினார். த.மு.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாகீர் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "8 வயது சிறுமி ஆஷிபாவை கூட்டாக கற்பழித்து கொடூர கொலை செய்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொலை வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், த.மு.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் கமலூதின் மற்றும் பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஊட்டியில் மழை பெய்தது. கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.