
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 34வது வணிகர் தினத்தையொட்டி இந்திய வணிக வளர்ச்சி மாநாடு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் விழுப்புரத்தில் நேற்று நடந்தது.
அப்போது, விக்கிரமராஜா பேசியதாவது:-
ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்து, அதனை செயல்படுத்தினால் வியாபாரிகள் அதிகளவு பாதிக்கப்படுவார்கள். இந்த சட்ட விதிகளை வைத்து கொண்டு வியாபாரிகளிடம் மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
வியாபாரிகளை மத்திய அரசு நசுக்க பார்க்கிறது.
ஜிஎஸ்டி சட்டம் கொண்டு வரப்பட்டால், மாதந்தோறும் மத்திய அரசுக்கு வியாபாரிகள் கணக்கு காட்டுவதே பிழைப்பாக மாறிவிடும்.
குறிப்பாக பூஜை பொருட்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி மசோதாவில் வரிவிலக்கு விதித்துள்ளனர். தினமும் உணவுக்கு பயன்படுத்தும் பொருட்களுக்கு அனைத்து வரிகளும் விதித்துள்ளனா. இந்த மசோதா நேரடியாகவே மக்களை பாதிப்படைய செய்துவிடும்.
இந்திய வணிகர்களின் வளர்ச்சிக்கு தடை கற்களாக இருக்கும் சட்டங்களையும், அதன் விதிமுறைகளையும் உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.
மத்திய அரசு உடனடியாக, வணிகர்களுக்கு எதிரான கொள்கைகளை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லைவிட்டால், வணிகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.