
திருச்சி
குடிநீர் பிரச்சனையைத் தீர்க்காவிட்டால் நாங்கள் சாலை மறியல் செய்வோம் என்று பெண்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் எச்சரிக்கை விடுத்தனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சியைச் சேர்ந்தது கரட்டூர் பகுதி. இப்பகுதியில் நான்கு ஆழ்குழாய் கிணறுகளும், மூன்று குடிநீர் கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு நிலவும் கடுமையான வறட்சியால் இவையனைத்தும் வறண்டு போனது. இதனால், இந்தப் பகுதியில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அருகில் உள்ள தோட்டத்துக் கிணற்றில் இருந்தும், கொட்டையூர் ஊராட்சி மூலமாக டிராக்டர் மூலமாகவும் மூன்று மாதத்திற்கு மட்டும் குடிநீர் வழங்கப்பட்டது பின்னர், அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சினம் கொண்ட அப்பகுதி பெண்கள் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வெற்றுக் குடங்களுடன் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்பு, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரனிடம் மனு கொடுத்தனர். அப்போது குடிநீர் பிரச்சனையைத் தீர்க்காவிட்டால் சாலை மறியல் செய்வோம் என்றும் எச்சரித்தனர்.
அவர்களிடம், ஆணையர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கிறோம்” என்று உறுதயளித்தனர்.
அதனையேற்று அனைவரும் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.