பாஜகவில் சீட் மறுக்கப்பட்ட விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக வி.எஸ்.நந்தினி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் விஜயதாரணி. இந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், அதிருப்தியில் இருந்த அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து விட்டார். தனது எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்து விட்டார்.
இதையடுத்து, அவருக்கு கன்னியாகுமரி தொகுதியில் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று முன் தினம் வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் அந்த தொகுதி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. இதனால், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலாவது விஜயதாரணிக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வெளியான பட்டியலில் விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நந்தினி என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் சர்ச்சை: இவரா பாஜக வேட்பாளர்? குமுறும் மக்கள்!
இந்த நிலையில், பாஜக சார்பில் கன்னியாகுமரி அல்லது விளவங்கோடு தொகுயில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றத்துக்கு உள்ளான விஜயதாரணி அதிருப்தியில் உள்ளதாகவும், அடுத்தக்கட்ட திட்டம் குறித்து அவர் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதனிடையே, விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த தொகுதியில் விஜயதாரணியின் பெயர் ஏற்கனவே டேமேஜாகி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தல்களிலும் கூட காங்கிரஸ் கட்சிக்குத்தான் அந்த தொகுதி மக்கள் வாக்களித்தார்களே தவிர விஜயதாரணிக்கு அல்ல என காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வாக்குவங்கியும் உள்ளது. எனவே, காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது உறுதி என்கிறார்கள். இதுபோன்ற காரணிகளை கருத்தில் கொண்டே விஜயதாரணிக்கு பாஜக சீட் வழங்கவில்லை என்கிறார்கள்.