
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. திமுகவும், காங்கிரசும் கூட்டணி வைத்துள்ளன. இந்த கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. இதில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளன. இதில் விசிக ஒருபடி மேலே போய் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதை அடிக்கடி உணர்த்தி வருகிறது.
இதற்கிடையே திமுக வெற்றி பெற்றவுடன் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்பதை காங்கிரசும் இப்போதும் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளது. அதாவது தேர்தலில் காங்கிரஸுக்கு 117 தொகுதிகள் வேண்டும் மற்றும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் அக்ரிஸ் சோனந்தர் உள்பட பல்வேறு தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தை கையில் எடுத்தார். ஆட்சியில் பங்கு தர வேண்டும் என காங்கிரஸ் கேட்பதால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி கொளுத்தி போட்டார். ஆனால் எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் தலைவர்கள், முதலில் இபிஎஸ் பாஜகவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.
ஆட்சியில் பங்கு கேட்கும் விஜய் வசந்த்
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்தும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என திமுகவுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜய் வசந்த், ''ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாக கேட்கிறீர்கள். இது தான் அனைத்து காங்கிரஸ்காரர்களின் ஆசையாக இருக்கும். திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறோம்.
காங்கிரஸ் தலைமை கையில்...
ஆகவே ஆட்சியில் பங்கு வேண்டும். வரும் தேர்தலில் கூடுதல் சீட்டுகள் ஒதுக்க வேண்டும் என்பது தான் காங்கிரஸ்காரர்களின் விருப்பம். ஆனால் அனைத்து முடிவுகளையும் அகில இந்திய தலைமையே எடுக்கும். பாஜக வாக்கு திருட்டு செய்து தான் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதை ராகுல் காந்தி ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார். தேர்தல் ஆணையம் என்ன செயவதென்று தெரியாமல் உள்ளது'' என்று தெரிவித்தார்.