
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த மத்தூர் காவல் நிலையத்தில் முதன்மை காவலர் ரமாமணி என்பவர் பணியாற்றி வந்தார். வாரந்தோறும் சனிக்கிழமை தொடரும் நடைபெறும் கவாத்து பயிற்சி வகுப்புக்கு சென்றுவிட்டு மீண்டும் மத்தூர் நோக்கி ஸ்கூட்டியில் சாலையின் இடதுபுறத்தில் இருந்து வலதுபுறமாக திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பெங்களூருவில் இருந்து விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர் பெண் காவலர் ஓட்டி வந்த ஸ்கூட்டியில் பயங்கரமாக மோதியது. இதில் பெண் காவலர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரமாமணி உடலை கைப்பற்றிய போலீஸ் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்தது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.