
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவம் நடந்தவுடன் தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல் உடனே சென்னை கிளம்பி சென்றது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. விஜய் மட்டுமின்றி தவெகவின் தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களை பார்க்காததற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது ஒருபக்கம் இருக்க, விஜய்ய்யுடன் கூடவே இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் சரியில்லை. அவர்களுக்கு அனுபவமும் இல்லை. இது சரியாக இருந்திருந்தால் கரூர் சம்பவமே நடந்திருக்காது என பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய் புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், நடிகரும், விஜய்யின் தீவிர விசுவாசியுமான தாடி பாலாஜி, தவெகவின் 2ம் கட்ட தலைவர்கள் சரியில்லை என்றும் விஜய் வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ''விஜய் தவெகவில் 2ம் கட்ட தலைவர்களை விசுவாசிகளாக நியமித்து இருந்தால் கரூர் கோர சம்பவமே நடந்திருக்காது. விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும். நான் விஜய்யை நேரில் சந்தித்தால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்வேன்'' என்று தெரிவித்தார்.
அதிமுக அனுபவம் + விஜய் ரசிகர் பட்டாளம்
விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து தவெக அதிமுவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என தாடி பாலாஜி தொடர்ந்து சொல்லி வருகிறார். ''தவெ கட்சி தனித்து நிற்காமல், அதிமுக போன்ற பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்தால் தான் திமுகவுக்கு உண்மையான சவால் கொடுக்க முடியும். தற்போது அதிமுக கூட்டணி சற்று பலவீனமடைந்திருக்கிறது.
இந்த சூழலில் விஜய் இணைந்தால், அது இரட்டிப்பு வலிமையாக மாறும். விஜய்யின் பெரும் ரசிகர் பட்டாளம் அதிமுகவின் அனுபவமான அமைப்புடன் இணைந்தால், 2026 தேர்தலில் தமிழகம் மாறும்'' என்று தாடி பாலாஜி கூறியுள்ளார்.