பரபரப்பை கிளப்பிய விஜய்யின் போஸ்டர்: விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புகார்!

By Manikanda Prabu  |  First Published Oct 13, 2023, 6:37 PM IST

மதுரையில் ஒட்டப்பட்ட நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தொடர்பான போஸ்டர் குறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புகார் அளித்துள்ளார்


விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் செய்து வருகிறார். அவரது மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருவதால், அவரது அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றது.

அதன் தொடர்ச்சியாக, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பரிசுகள் வழங்கினார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில், 'விஜய் பயிலகம்' என்ற பெயரில், 234 சட்டமன்றத் தொகுதிகளில் இரவு பாடசாலை துவக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும், வழக்கறிஞர் அணியினர் உள்ளிட்டோருடன், ஆலோசனை நடத்தியுள்ள நடிகர் விஜய், விரைவில், மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து, அரசியல் களமிறங்க, நடிகர் விஜய் மிக வேகமாக ஆயத்தமாகி வருவதாக கூறப்படும் நிலையில், பூத் ஏஜன்டுகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க,  அவ்வப்போது விஜய் ரசிகர்கள் அரசியல் சார்ந்த வசனங்களை வைத்து போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்தவகையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் என குறிப்பிட்டு, மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் இணையத்தில் வைரல் ஆனது. நாளிதழின் தலைப்பு செய்தி போன்று வடிவமைக்கப்பட்டிருந்த அந்த போஸ்டரில், மத்தியில் மோடியின் நல்லாட்சி மாநிலத்தில் விஜய்யின் மக்களாட்சி என குறிப்பிட்டு, விஜய் முதலமைச்சர் பதவி ஏற்பது போலவும், அதற்கு மோடி வருகை தருவது போன்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உத்திரமேரூர் கல்வெட்டை மேற்கோள் காட்டிப் பேசிய பிரதமர் மோடி!

இந்த போஸ்டர் வைரலானதுடன் கடுமையான சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. பாஜகவுடன் விஜய் கூட்டணி அமைக்கும் தொனியில் ஒட்டப்பட்டிருந்ததால், அரசியல் ரீதியாக பேசுபொருளானது. ஆனால், தவறான தகவல் பரப்பி விஜய் நற்பெயரை கெடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கத்தின் புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார்.

அந்த போஸ்டரில் விஜய் மக்கள் இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட பதவியில் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் விஜய் மக்கள் இயக்கத்தில் அப்படி ஒரு பதவியே இல்லை எனவும் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், மதுரையில் ஒட்டப்பட்ட நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தொடர்பான போஸ்டர் குறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புகார் அளித்துள்ளார். விஜய்யின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டிய முன்னாள் நிர்வாகி பத்ரி சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புகார் அளித்துள்ளார்.

click me!