
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. இந்த சம்பவம் நடந்தவுடன் சென்னை சென்ற விஜய் வீட்டில் இருந்து வெளியே வராததும், அவரும் மற்ற தவெக தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாததும் கண்டனங்களுக்கு வழிவகுத்தன.
இதற்கிடையே தவெக தலைவர் விஜய் கரூர் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசுவார் எனவும் இதற்காக மண்டபம் பார்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்படவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அழைத்து வந்து அவர்கள் அனைவருக்கும் விஜய் இன்று ஆறுதல் கூறியுள்ளார்.
மாமலப்புரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறிய விஜய், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார். வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உறுதியாக இருப்பேன் என்று பாதிக்கப்பட்டவர்களிடம் உருகிய விஜய், கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு என அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விஜய்
மேலும் கரூர் சம்பவத்துக்காக பாதிக்கப்பட்டவர்களின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக கரூரில் இருந்து வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் விஜய் கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுடன் பேசியுள்ளார். விஜய் அனைவருக்கும் ஆறுதல் சொன்ன நிலையில், கரூரில் இருந்து வந்த ஒரு பெண் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் மீது கடும் விமர்சனம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறாமல் தன் இடத்துக்கு வரவழைத்து விஜய் ஆறுதல் கூறியது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. கரூரில் மண்டபம் கிடைக்காததால் நேரில் வர முடியவில்லை என்று விஜய் பாதிக்கப்பட்டவர்களிடம் கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது. எந்த காரணமாக இருந்தாலும் விஜய் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த எலைட் அரசியல்வாதியை தேர்தலில் மக்கள் புறம்தள்ளுவார்கள் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.