
கேளிக்கைப் பூங்காக்கள், கோவில் திருவிழாக்கள் மற்றும் பொருட்காட்சிகளில் இயக்கப்படும் பெருஞ்சக்கரங்கள் (Giant/Ferris Wheels) எனப்படும் பிரம்மாண்ட ராட்டினங்களை இயக்குவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் ராட்டினங்களில் விபத்துச் சம்பவங்கள் பதிவானதை அடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெருஞ்சக்கரங்கள் என்பவை கேளிக்கைப் பூங்காக்கள் போன்ற நிலையான அமைப்புகளிலும், கோவில் திருவிழாக்கள் மற்றும் பொருட்காட்சி போன்ற தற்காலிக அமைப்புகளிலும் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் இந்த ராட்டினங்களில் சில விபத்துத் தகவல்கள் பதிவான நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உருவானது.
இதனைக் கருத்தில் கொண்டு, விபத்துகளைத் தடுப்பது குறித்து நிலையான மற்றும் தற்காலிக அமைப்புகளின் நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இந்தியத் தர நிர்ணயக் கழகத்தின் (BIS) அதிகாரிகள் உள்ளிட்ட பங்குதாரர்களுடன் கடந்த 13.06.2025 அன்று கூட்டம் நடத்தப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, பெருஞ்சக்கரம் / பயணிகள் விசைச் சக்கரம் இயக்கத்திற்கான தரநிலைப்பட்ட செயல்பாட்டு வழிமுறை (SOP) உருவாக்கப்பட்டு, அரசாணை(நிலை) எண் 409, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, நாள் 29.09.2025-ல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தரநிலைப்பட்ட வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதன் மூலம் விபத்துகள் தடுக்கப்படும் என அரசு நம்புகிறது.
இந்த அரசாணை வெளியிடப்பட்டதில் இருந்து ஆறு மாதத்திற்குள், தற்போது இயங்கிவரும் கேளிக்கைப் பூங்காக்களில் உள்ள பெருஞ்சக்கரங்களுக்கு இந்தியத் தர நிர்ணய கழகத்தின் (BIS) தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ராட்டினங்களை இயக்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் இந்த அரசாணையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், பொருட்காட்சி மற்றும் கோவில் திருவிழாக்கள் போன்ற தற்காலிக அமைப்புகளில் பெருஞ்சக்கரம் இயக்குவதற்குப் பல்வேறு துறைகளிடம் பெறப்படும் அனுமதிக்கான நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையுடன் இணைந்து இணையவழி ஒருங்கிணைப்பு (Online integration) முறையினைச் செயல்படுத்த சுற்றுலாத் துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.